Skip to main content

கன்னட இயக்குநருடன் களத்தில் இறங்கிய சந்தானம் ; வைரலாகும் புகைப்படம்

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Santhanam on the field with the Kannada director; Photo goes viral

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக்கிலோனா' மற்றும் 'சபாபதி' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத்தொடர்ந்து நடிகர் சந்தானம் இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக  பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'சந்தானம் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகவுள்ளது. 

 

இந்நிலையில் 'சந்தானம் 15' படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பெங்களூரில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக 'தன்யா ஹோப்' நடிக்கிறார். இது குறித்தான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'பார்ஜுன் பிளம்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, பாங்காங், லண்டன் ஆகிய இடங்களில் நடத்தவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் இதுவரை ஏற்று நடிக்காத ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இந்த படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டைமிங் காமெடி கைகொடுத்ததா? - 'வடக்குப்பட்டி ராமசாமி' விமர்சனம்!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
vadakkupatti ramasamy movie review

டிக்கிலோனா படம் தந்த வெற்றியின் உற்சாகத்தில் அதே டீம் உடன் இணைந்து மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கிறார் நடிகர் சந்தானம். இந்தப் படம் இந்த டீமின் முந்தைய படத்தை போல் வரவேற்பை பெற்றதா, இல்லையா?

1970களில் வடக்குப்பட்டி என்னும் கிராமத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி என்ற சந்தானம் அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை தன் சொந்த இடத்தில் கட்டிய கோயில் மூலம் மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி கல்லா கட்டுகிறார். இதைக் கண்ட கிராமத்தின் தாசில்தார் 'ஜெய் பீம்' புகழ் தமிழ் இவர்கள் அடிக்கின்ற கொள்ளையில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்கிறார். இதனால் சந்தானத்திற்கும் தமிழுக்கும் மோதல் ஏற்படுகிறது. இவர்களுக்குள் இருக்கும் ஈகோ மோதலால் அந்த கோயில் அரசாங்கத்தால் மூடி சீல் வைக்கப்படுகிறது. சந்தானத்துடன் இணைந்து அந்த ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து சண்டையிட்டுக் கொள்ளாமல் இருந்தால் கோயிலை திறந்து விடுவோம் என அரசாங்கம் முடிவு எடுக்கிறது. இதையடுத்து மீண்டும் அந்த கோவிலை திறக்க சந்தானம் அண்ட் கோ என்னவெல்லாம் செய்கிறது? அதை தடுக்க முயற்சிக்கும் தமிழ் அண்ட் கோ வின் நிலை என்ன ஆனது? என்பதை இப்படத்தின் மீதி கதை.

டிக்கிலோனா படம் பெற்ற வரவேற்பை அப்படியே கண்டினியூ செய்து இந்தப் படத்திலும் அதே வரவேற்பை பெரும்படி ஒரு நிறைவான நகைச்சுவை படத்தைக் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தன் அந்த கடவுளை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான் என்ற ஒற்றை வரி கதையை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பான நகைச்சுவையை திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டி படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. முதல் பாதி சற்றே மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகம் எடுத்து இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் பறந்து பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து நிறைவான படம் பார்த்த உணர்வை கொடுத்துள்ளது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம். ஒரு சந்தானம் படத்தில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ அதை எல்லாம் இந்த படம் மீண்டும் ஒருமுறை நிறைவாக கொடுத்து ரசிக்க வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.

வழக்கம்போல் நாயகன் சந்தானம் தனது ட்ரேட் மார்க் ஆன்லைன் பஞ்ச் வசனங்களால் ரசிகர்களுக்கு காமெடி விருந்து கொடுத்துள்ளார். இவரது அதிரிபுதிரியான வசன உச்சரிப்பு, காமெடி டைமிங்ஸ் ஆகியவை படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வரும் மேகா ஆகாஷ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். சந்தானம் படம் என்றாலே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கும். அதேபோல் லொள்ளு சபா டீமும் உடன் இருந்து கலக்குவார்கள். அவை அப்படியே இந்தப் படத்தில் பிரதிபலித்து படத்தை வேறு ஒரு காலத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ரவி மரியா, ஜான்விஜய், சேசு, மாறன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், தண்டோரா போடும் நபர், இட் இஸ் பிரசாந்த், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் கொண்ட நட்சத்திர பட்டாளம் அவரவருக்கான ஸ்பெஷலில் புகுந்து விளையாடி பார்ப்பவர்களை கிச்சு கிச்சு மூட்டி உள்ளனர். இவர்களின் நேர்த்தியான காமெடி டைமிங்குகளும் ஆன்லைன் பஞ்ச் வசனங்களும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக புல் சுரேஷின் அசிஸ்டன்ட்களாக வரும் நடிகர்கள் அனைவரும் நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருக்கின்றனர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மூத்த நடிகர் நிழல்கள் ரவி அவர் பங்குக்கு காமெடியில் அதகலம் செய்து இருக்கிறார். 

தீபக்கின் ஒளிப்பதிவில் வடக்குப்பட்டி கிராமமும் அதை சுற்றி இருக்கும் மலை முகடுகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக படம் 1970களில் நடப்பதால் எங்குமே மொபைல் டவர்கள் தென்படாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டு அதே சமயம் நேர்த்தியான காட்சி அமைப்புகளையும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். சான் ரோல்டன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை நகைச்சுவைக்கு சிறப்பாக உதவி புரிந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். அதேபோல் அவருக்கு ஏற்படும் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக மெட்ராஸ் ஐ நோயை வைத்து அவர் செய்யும் சேட்டைகளை சிறப்பான திரைக்கதை மூலம் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கொடுத்து ரசிகர்களை காமெடியில் மீண்டும் ஒருமுறை திக்கு முக்காட செய்து இருக்கின்றனர்.

வடக்குப்பட்டி ராமசாமி - சிரிப்புக்கு கேரன்டி!

Next Story

ஒப்பனை முடியா? -  இயக்குநருடன் வாக்குவாதம் செய்த தான்யா ஹோப்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Tanya Hope | Santhanam | Kick |

 

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக நடிகை தான்யா ஹோப் அவர்களை சந்தித்தோம். கிக் படத்தில் நடித்தது தொடர்பாக தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்

 

நான் நடிக்கும் முதல் தமிழ் காமெடி படம் 'கிக்'. இந்த ஜானர் எனக்கு புதிதாக இருந்தது. இது என்னுடைய மூன்றாவது தமிழ் படம் என்பதால் நன்றாக தமிழ் கற்றுக்கொண்டேன். ஆனால் காமெடி என்பது எனக்கு புதிய விஷயம். சந்தானம் சார் ஒரு காமெடி கிங். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு படத்திலும் எனக்கு வித்தியாசமான ஜானர்கள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

 

'தடம்' படத்தில் லிப்லாக் காட்சியில் நடிக்கும்போது பயமாக இருந்தது. எனக்கும் அருண் விஜய்க்கும் ஒருவரை ஒருவர் அதற்கு முன் தெரியாது. அந்தக் காட்சிக்கான முக்கியத்துவம் குறித்து இயக்குநர் விளக்கினார். அதன்பிறகு அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. கிக் படத்தில் பல்வேறு காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களோடு எனக்கு காட்சிகள் இல்லை. என்னுடைய கரியர் குறித்து நான் பெரிதாக ப்ளான் செய்வதில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தோடு நான் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆடியன்ஸ் நம்மை நம்பி படம் பார்க்க வருவதால் நிச்சயம் நமக்கான பொறுப்பு அதிகம் இருக்க வேண்டும். நல்ல கதைகளை நான் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 

 

கிக் படத்தின் இயக்குநர் பிரசாந்த் ராஜ் மிகவும் ஸ்ட்ரிக்டானவர். என்னுடைய கேரக்டருக்காக விக் வைக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது நான் அதை விரும்பவில்லை. என்னுடைய ஒரிஜினல் முடியுடன் நடிப்பது தான் எனக்கு பிடிக்கும். புதுவிதமாக என்னைக் காட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களைப் பார்க்கும்போது அதில் நான் நடித்திருக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்படும். பயோபிக் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. 

 

எமோஷனல் காட்சிகளில் நடிப்பது எனக்கு எளிதான ஒன்றாக இருக்கிறது. காமெடி காட்சிகளில் நடிப்பது தான் கஷ்டம். என்னுடைய கல்யாணம் பற்றி யாரும் அதிகம் கேட்டதில்லை. என்னுடைய குடும்பத்தில் நான் கல்யாணம் செய்துகொள்ள அனுமதிக்க மாட்டார்கள். எனக்கும் இதுவரை யாரையும் பிடிக்கவில்லை. கிக் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாக இருக்கும். முதல் முறையாக நான் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றி சொல்ல வேண்டும். முதலில் இருந்தே நீங்கள் என்னிடம் நிறைய அன்பு செலுத்தி வருகிறீர்கள்.