கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு 10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட ஜாக்குலின் பெர்னான்டஸ் வெளிநாடு செல்ல முயன்ற போது மும்பை விமான நிலையத்தில் அமலாக்கத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டர். பின்பு விசாரணை நடத்தி அவருக்கு சொந்தமான 7.27 கோடி ருபாய் பணத்தையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸையும் குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. மேலும் சுகேஷ் சந்திரசேகர் மோசடியாக சம்பாதித்த 215 கோடி ரூபாய் பணத்தில் 5.71 கோடி ருபாய் ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.