நடன இயக்குனராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அக்ஷய் குமாரை வைத்து ‘லக்ஷ்மி பாம்’ என்றொரு படத்தை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ்.
தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா. இந்த திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர, காஞ்சனா 3 பாகம் வரை வெளியாகி வெற்றிகரமாக ஓடியுள்ளது. இந்நிலையில் ‘காஞ்சனா’ படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கின்றார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் லாரன்ஸின் ட்ரஸ்ட் தொடங்கப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றது. இதை கொண்டாடும் வகையில் திருநங்கைகளுக்கு என இல்லம் கட்ட திட்டமிட்டுள்ளார்கள். அந்த விஷயத்தை அறிந்த அக்ஷய் குமார் 1.5 கோடி நிதியுதவி செய்தார். இந்த தகவல் வைரலாகி, பலரும் அக்ஷய் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரை பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மீண்டும் ஒரு முன்னெடுப்பு எடுக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் வகையில் ஓரு ஆலயம் அமைக்க இருப்பதாக அறிவித்து உள்ளார்.
மதங்களாலும், சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்த முயற்சி. நெருப்பிற்கும், பசிக்கும் சாதி மதம் தெரியாது. அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.