இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாகவுள்ளார் பிரியாமணி. கடந்த மாதம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மைதான், கன்னடத்தில் கைமாரா மற்றும் தமிழில் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், பீட்டா அமைப்புடன் இணைந்து இயந்திர யானையை கோவிலுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் பிரியாமணி. கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பில் அவர்களுடன் கைகோர்த்த பிரியாமணி, கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு, இயந்திர யானையை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இந்த கோயிலில் யானைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்ற முடிவை பின்பற்றி வருகிறார்கள். இயந்திர யானைக்கு மகாதேவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது இயந்திர யானை இதுவாகும்.
இது குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்” என்றுள்ளார்.