சித்தார்த் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் கதைக் களத்தைக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மிஸ் யூ’. என்.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்க ஜெயப் பிரகாஷ், பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கார்த்தி பங்கேற்று படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருந்தார்.
அந்நிகழ்ச்சியில் சித்தார்த் பேசுகையில், “நெகட்டிவான விஷயங்கள் தீ போல பரவிவிடும். இன்றைக்கு பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது. நெகட்டிவான விஷயங்களை மிஸ் பண்ணக்கூடிய அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால் பாசிட்டிவான விஷயங்களைத் தேடிப் போவோம். மிஸ் யூ படமும் பாசிட்டிவான படம்தான். இந்த படத்தில் வன்முறைகள் இருக்காது. ஃபீல் குட் திடைப்படாக இருக்கும். எங்களுடைய சின்ன வயதில் விஜய்யின் படங்களைப் பார்த்து வளர்ந்தோம். அவரின் படங்களில் நட்பு, காதல், பாடல்கள், சமூக கருத்துகள் என பல பாசிட்டிவான விஷயங்கள் இருக்கும். இப்போது 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என்று சொல்கிறார்கள் அதில் எனக்குப் பெரிதாக வித்தியாசம் தெரியாது. ஆனால், மிஸ் யூ படத்தில் 90ஸ் கிட்ஸ் கதாபாத்திரங்கள்தான் இருக்கும்.
இந்த படத்தின் கதையை இயக்குநர் சொல்லும்போது, லவ் ஸ்டோரி என்று சொன்னார். அதற்கு நான் லவ் ஸ்டோரி வேண்டாங்க, நான் 10 வருஷமா அந்த பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை. லவ் ஸ்டோரி கதைக்களத்தில் தெலுங்கில் நடித்த பிறகு மற்ற கதைகள் வராமல் அதே மாதிரியான கதைகள் தான் வந்தது. என்னால் காதல் தொடர்பான படங்களில் மட்டும்தான் நடிக்க முடியும் என்ற நெருக்கடிக்குத் தள்ளிவிட்டார்கள். அதிலிருந்து ஓடினவன்தான் அதன் பிறகு காதல் பக்கமே போகவில்லை. அதனால் இயக்குநரின் கதைக்கு நோ சொல்ல வேண்டும் என்ற முடிவோடு கதை கேட்க ஆரம்பித்தேன். அவர் கதை சொல்லத் தொடங்கியபோது உலகத்திலேயே பிடிக்காத பெண்ணுக்குக் காதல் சொல்லப் போகிறீர்கள் என்று சொன்னார். அதெப்படி என்று கதை கேட்டு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
அதன் பிறகு இயக்குநரிடம் நீங்களும் நானும் பார்க்காத படமாக எடுக்க வேண்டுமென்று சத்தியம் பண்ணச் சொன்னேன். ஏனென்றால் அரைத்த மாவையே அரைப்பதற்குப் படத்தில் நடிக்கத் தேவையில்லை, அப்படி படமெடுத்தால் இந்த காலத்துப் பசங்க கிரிஞ்ச் என்று சொல்லிவிடுவார்கள். மிஸ் யூ படம் ட்ரெண்டில் இருக்கும் விஷயங்களைப் பற்றியது இல்லை. கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டுள்ள படம். காதல் கதைக்கு எப்போதுமே பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. காலம் கடந்து ரசிப்பார்கள். இப்போது கல்யாணம் செய்துகொண்ட பெண்கள் ஏன் லவ் படங்களில் நடிக்காமல் இருக்கிறீர்கள்? என்று கேட்பார்கள். அப்போது நான் லவ் படங்களில் புதிதாக ஒன்றுமில்லை பண்ணதையே பண்ணிச் சலிப்பாகிவிட்டது என்பேன். அதற்கு அவர்கள் நாங்கள் இப்போது நல்ல பசங்களைத் தேர்வு செய்து திருமணம் செய்யக் காரணம் உங்களின் பங்களிப்பு இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் நடித்த லவ் படங்களில் காதலுக்கான உண்மையான காரணங்கள் இருந்தது என்றனர். அவர்கள் சொன்னது எனக்கு ஆழமாக மனதில் பதிந்தது. அதனால் காதல் மட்டுமில்லை எல்லா ஜானரிலும் திரும்பவும் படம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொண்டேன். மிஸ் யூ படத்தில் ரியாலிட்டியும் இருக்கும் சினிமாவில் காண்பிக்கப்படும் அழகான விஷயங்களும் இருக்கும் என்றார்.