கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் சரத் குமாரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
சரத்குமார் பேசுகையில், “நிறங்கள் மூன்று படத்தின் கதை வித்தியாசமான களமாக இருந்தாலும் புதுமையான விஷயங்கள் இருந்தது. படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் புதிய முயற்சியை சிறப்பாக கார்த்திக் நரேன் செய்திருக்கிறார். இதை ஆடியன்ஸ் எந்தளவிற்கு விரும்புவார்கள் எனத் தெரியவில்லை. அதை கணிக்கவும் முடியாது. ஆனால், நிறங்கள் மூன்று நல்ல படம். பட ரிலீஸ் திடீரென முடிவாகிவிட்டதால், படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்ய முடியவில்லை. இருந்தாலும் ஒரு முறை இந்த படத்தை திரையரங்கில் பாருங்கள். கார்த்திக் நரேனின் திறமையை அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டும். மிகப்பெரிய உச்சத்திற்கு செல்லக்கூடிய ஒரு இயக்குநராக அவரை நான் பார்க்கிறேன். ஆஹா.. ஓஹோ என்று சொல்ல விரும்பவில்லை. படம் பார்ப்பவர்கேளே அதை முடிவு செய்து கொள்ளட்டும்” என்றார்.
மேலும் அவர் தனது வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி பேசுகையில், “நான் திரைத்துறையிலிருந்து அரசியல் களம் வரை வருவதற்கான காரணம் ஒழுக்கம்தான். நான் எடுத்த கொள்கையில் இன்று வரை மாறாமல் சமத்துவ நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். எல்லோரும் சமம் என்று நினைப்பவன் நான். கையை கீறினால் எல்லோருக்கும் இரத்தம் ஒரே மாதிரிதான் இருக்கும். நான் எல்லோரும் ஒன்று என்ற தத்துவத்தில் இருப்பவன். அதில் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. சமத்துவம்தான் என்னுடைய அடிப்படை தத்துவம். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இப்போது இருக்கும் இடத்திலிருந்து இன்னும் லட்சக்கணக்கான மக்களுக்கு அதைச் செய்ய விரும்புகிறேன். மேலும் ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர நினைத்தேன். அது இங்கு நடக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை புத்தமாக எழுதிவிட்டேன், அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அந்த புத்தகத்திற்கு ‘புரியாத தேடல்’ என்று பெயர் வைத்துள்ளேன்” என கூறினார்