Skip to main content

மலர் டீச்சரையும் ஜார்ஜையும் மறக்க முடியலையே... 

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

நேசமணி... கடந்த வாரம் சோசியல் மீடியாவை புயலென சூழ்ந்திருந்த ட்ரெண்ட் இதுதான். அதற்கிடையில் அமைதியாக இன்னோன்றும் பேசப்பட்டது. அது பிரேமம் படம். 29 மே அன்று பிரேமம் படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டதைத் தொடர்ந்து ப்ரேமம் ரசிகர்கள் பேசிக்கொண்டாடினர். 4 ஆண்டுகள் கழித்தும் பேசும் அளவிற்கு அந்தப் படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் வித்தியாசமான திரைக்கதையோ யூகிக்கமுடியாத திருப்பங்களோ இல்லை. கோடிக்கணக்கில் செலவழித்து VFX  ஷாட்களும் செய்யப்படவில்லை. சாதாரணமான காதல் கதைதான். ஆனால் கதை சொன்னவிதம், நிகழ்ந்த இடம், ஒவ்வொருவரும் தங்களை பொருத்திப் பார்க்கவிரும்பும் கதாபாத்திரங்கள், இசை எல்லாம் சேர்ந்து படத்தை கொண்டாடக்கூடியதாக செய்துவிட்டது.

 

malar george



நிவின் பாலி, படத்தில் ஜார்ஜ்... படம் வந்ததுதான் தாமதம் கேரளா மட்டுமில்லாமல் தமிழக இளைஞர்களுக்கும் ஹீரோவாகிப் போனார். இன்று வரை கல்லூரி விழாக்களில் கருப்பு சட்டையும் வேட்டியும் கட்டிக்கொண்டு ஒரு குரூப் சுற்றுகிறது. அர்ஜுன் ரெட்டி பக்கம் சிலர் போய்விட்டாலும் ஜார்ஜுக்கு இன்னும் கல்லூரிகளில் மாஸ் இருக்கிறது. படத்தில் பதின்பருவ பையன், கல்லூரி மாணவன், சராசரி இளைஞன் என மூன்று தோற்றங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார். வலியும் உருகும் காதலனாக அடித்துக் கிளப்பும் கெத்தான கல்லூரி மாணவனாக நிவின் தன் மேல் ஒரு தலைமுறையையே ப்ரேமம் கொள்ளவைத்தது உண்மை.


அனுபமா பரமேஸ்வரன், இளம் பருவத்தில் ஜார்ஜின் காதலியாக மேரி எனும் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார். பெரிய அளவில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் தனது சின்ன சின்ன அழகான எக்ஸ்பிரஷன்களாலும் சுருள் சுருளான கூந்தலாலும் இளைஞர்களின் மனதில் பதிந்துவிட்டார்.

  george and co



மலர் டீச்சர், படத்தின் மிக முக்கியமான பாத்திரம். மலர் டீச்சர் வரும் காட்சிகள்தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். சாய் பல்லவி மலர் டீச்சர் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்திப்போய்விட்டார். நான் முகப்பருக்களுக்கு எந்த ட்ரீட்மெண்ட் எடுக்கவெல்லாம் மாட்டேன், அப்படியேதான் நடிப்பேன் என இயக்குனரிடம் முன்பே கூறியதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அதிக மேக்கப் இல்லாமல் முகப்பருக்களுடன் ஒரு அழகிய இளம் பேராசிரியையாக, கடவுளின் தேசத்தை ஆண்ட தமிழ்ப் பெண் சாய் பல்லவி. தமிழர்களை கிண்டல் செய்து காட்சிகள் வைக்கும் மலையாள சினிமாவில் இப்படி ஒரு மாற்றத்தை உண்டாக்கியது மலர் என்றால் அது மிகையாகாது. இன்றுவரை மலர் டீச்சர் போல் ஒரு பேராசிரியை வரவேண்டுமென இளைஞர்கள் விரும்புமளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் சாய்பல்லவி. திடீரென அவர் ஆடும் டான்ஸ் அதுவரை அவரை வேறாகப் பார்த்த ரசிகர்களை ஒரு ஆட்டம் காண வைத்தது.

சிறு வயதில் ஜார்ஜின் காதலியான மேரியுடன் சுற்றி இறுதியில் ஜார்ஜுக்கே ஜோடியாகும் பாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் அழகிய குட்டிப் பெண் செலினாக ரசிகர்கள் மனதில் பதிந்து போனார் . இந்த மூன்று நடிகைகளையும் தன் படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்துவிட்டது தமிழ் சினிமா. ஜார்ஜின் நண்பர்களான ஷாம்பு, கோயா, அந்த பி.டி வாத்தியார், ஜாவா சார் என இன்றும் ப்ரேமம் படத்தின் பாத்திரங்களை யோசிக்காமல் வரிசையாகச் சொல்லலாம். அப்படி நிற்கின்றனர் மனதில்.

 

anupama premam



படத்திற்கு இன்னொரு பலம் இசை. நேரடி மலையாள பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த அளவு ஹிட்டானது புது வரலாறு. மலரே பாடலையும், ஆலுவா புழையுடைதீரத்து பாடலையும் மொழி தெரியாதவர்கள் கூட முழுவதுமாக படும் அளவிற்கு பெரிய அளவில் ஹிட் அடித்தன. அதுமட்டுமில்லாமல் 'களிப்பு' அதிரடி பாடல் வந்த புதிதில் இளைஞர்களுடைய ரிங்க்டோனாக ஒலித்தது. கல்லூரியில் நிவினின் அறிமுகக்காட்சியில் 'களிப்பு' பாடலோடு பட்டையை கிளப்பிருப்பார்கள். அங்கங்கு காட்சியை ஸ்லோவாக்கி அதற்கு ஏற்றாற்போல் பின்னணியில் களிப்பு பாடலை சேர்த்திருப்பார்கள். நிவினின் பாடி லாங்குவேஜ், அந்த இசை என சேர்ந்து ஒரு மாஸ் ஆன கட்சியாக அமைந்திருக்கும். அனிருத் குரலில் 'ராக்கங்குத்து' பாடலும் ஹிட்.


ஒரு காதல் கதை, இரண்டு முறை காதலில் தோற்றவன் மூன்றாவது காதலில் வெல்கிறான் என்பதே மொத்த கதை. ஆனால் அழகான நீரோடை போன்ற திரைக்கதை மற்றும் ஆலுவாவின் கண்களை மயக்கும் இடங்களில் நடக்கும் காட்சியமைப்புகளால் படத்தை கொண்டாட வைத்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். பள்ளி, கல்லூரிப்பருவத்தில் கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே ஒரு காதல் வந்திருக்கும். அந்த உணர்வைத் தொட்டு ஒரு மேஜிக்கை செய்துகாட்டியிருந்தார் அல்போன்ஸ்.

ப்ரேமம் தெலுங்கு ரீமேக் என்று செய்தி வந்தவுடனேயே விமர்சனங்களும் கிண்டல்களும் வரத்தொடங்கின. தெலுங்கில் படம் வந்து அதை இன்னும் அதிகரித்தது. ப்ரேமம் படம் என்பது அந்த கதையோ, மலர், ஜார்ஜ் பாத்திரங்களோ மட்டுமல்ல, அழகிய கேரளா, இசை, என ஒரு நூறு காரணிகள் சேர்ந்தது. அதை ரீமேக் செய்ய வேண்டியதில்லை, செய்யவும் முடியாது. அப்படியே ப்ரேமம் கொள்ளவேண்டியதுதான்.        

 


  

சார்ந்த செய்திகள்