திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அப்பகுதியில் வாழும் விவசாயிகள், அவர்களது பிரச்சனையை எடுத்துரைத்தனர். அப்போது பேத்துப்பாறை பகுதி ஊர் தலைவர் மகேந்திரன், நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், "கிட்டத்தட்ட 15 வருஷமாக இப்பகுதியில் சாலை போடவில்லை. கடந்த மே 1 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் சாலை அமைக்க வேண்டும் என நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் பிறகு அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. ஆனால் அதற்கு பிரகாஷ் ராஜ் பணம் கொடுத்ததாக சொல்கிறார்கள்.
அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாபி சிம்ஹா மூன்று மாடி கட்டிடம் கட்டி வருகிறார். மலை கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளிடம் தவறாக நடந்து கொள்கிறார். கேட்டதற்கு ஒருமையில் பேசுகிறார். மேலும் அந்த இடத்தை ரூ.1 லட்சம், ரூ. 2 லட்சத்திற்கு விற்கிறார்கள். விற்று அங்கு கட்டிடம் கட்டுகிறார்கள். அதற்கு எதிர்புறமான இடத்தில ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடத்தை தோண்டி வருகின்றனர். இதில் ஏதோ முறைகேடு நடக்கிறது என்பது தெரிகிறது. அனுமதி இல்லாமல் அவர்கள் செய்கின்றனர்" என்றார்.