அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் நடிகர்கள் பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் உரிய அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலம் அல்லாது அதற்கருகில் உள்ள சதுப்புநிலத்தை ஆக்கிரமித்ததாக அக்கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும் பாபி சிம்ஹா, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டிடம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பிரகாஷ் ராஜ், அஞ்சுவீடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் உள்ள பாரம்பரிய பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தத் தடையில்லை எனவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.