Skip to main content

"காந்தியைக் கொன்றவர்கள் எப்படி விருது தருவார்கள்" - பிரகாஷ் ராஜ் சரமாரி கேள்வி

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

prakash raj about jai nhim national award issue

 

இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது. 

 

இதில் தமிழ் கலைஞர்கள் மற்றும் தமிழ் படங்கள் என்று பார்க்கையில், சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் கடைசி விவசாயி வென்றுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற 'மாயாவா சாயவா...' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது. 

 

அதைத் தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் சிறந்த கல்வித் திரைப்படம் என்ற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த படம் என்ற பிரிவில் மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படத்திற்கும் ஸ்பெஷல் ஜுரி விருது, இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஷெர்ஷா' படத்திற்கும் கிடைத்துள்ளது.

 

இந்நிலையில், தமிழில் முக்கிய படங்களாகப் பார்க்கப்பட்ட சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியின் ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியின் சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியின் கர்ணன் உள்ளிட்ட படங்கள் ஒரு விருதினைக் கூட பெறவில்லை. குறிப்பாக ஜெய் பீம் படத்திற்கு விருது அறிவிக்காதது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதற்கு சுசீந்திரன், பி.சி ஸ்ரீராம் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் பிரகாஷ் ராஜ், "காந்தியைக் கொன்றவர்கள்,  இந்திய அரசியலமைப்பை தந்த  அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய் பீம் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?" என அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜெய் பீம் படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்