சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் கடந்த வியாழன்று(10.3.2022) திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். சூர்யாவின் முந்தைய படங்களான சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கூடவே இப்படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'உள்ளம் உருகுதய்யா...' என்ற பாடலில் கடவுள் முருகனை இழிவுபடுத்தி உள்ளதாகக் கூறி அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அக்கட்சியினர் கொடுத்த புகாரில், "உள்ளம் 'உருகுதய்யா...' பாடல் வெளியாகி பல நாட்கள் ஆனாலும் எதற்கும் துணிந்தவன் படம் வெளியான பிறகுதான் கடவுள் முருகனை இழிவுபடுத்தியது தெரியவந்தது. இதனால் படத்தில் இருந்து 'உள்ளம் உருகுதய்யா...' பாடலை நீக்க வேண்டும் எனவும் நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும், இது கடவுளையும், நம்பிக்கையையும் இழிவுபடுத்துவோருக்கான பாடமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.