![pl](http://image.nakkheeran.in/cdn/farfuture/uvox49jySnlcAxpTh2tT3PwlSrX12T9UHsKb3R8NK5E/1533347670/sites/default/files/inline-images/pllll.jpg)
சமீபகாலமாக சென்னையில் சொகுசு கார் ஓட்டிச்செல்லும் விஐபிக்கள் மதுபோதையில் வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குகின்றனர். இதனை தடுக்க போலீஸார் வாகன சோதனையை கடுமையாக்கி துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு போலீஸார் வழக்கம் போல் நடத்திய வாகன சோதனையில் பிரபல சினிமா படத் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் மதுபோதையில் கார் ஓட்டி வந்து சிக்கினார். நேற்றிரவு 11.45 மணி அளவில் ராயப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் ரவி கதீட்ரல் சாலை, சோழா ஹோட்டல் முன்பு வாகன தணிக்கை செய்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த TN01 AZ 9939 நம்பர் கொண்ட ஹோண்டா சிட்டி சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரை ஒட்டி வந்த தேனப்பன் மது அருந்தியிருந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். மேலும் அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமமும் பரிமுதல் செய்யப்பட்டது. தேனப்பன் வீடு வீடு ராயப்பேட்டை நெடுஞ்சாலை அரிஹந்த் அப்பார்ட்மெண்ட்டில் உள்ளது. எனவே போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது காரை தர மறுத்துவிட்டனர்.இந்நிலையில் இன்று அதிகாலை 2.00 மணி அளவில் ராயபேட்டை காவல் நிலையத்தில் தனது காரை காணவில்லை என தேனப்பன் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பின்னரே விடுவிக்கப்படும், இது போன்ற புகார் அளிக்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது தேனப்பன் கார் எங்குள்ளது என்று தெரியவில்லை. ஊடகங்கள் கண்ணில் படாமல் இருக்க போலீஸார் மறைவான ஒரு இடத்தில் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.