லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90வது ஆஸ்கர் விருது விழா நேற்று கோலாகாலமாக நடைபெற்றது. இதில் அனிமேஷன் படங்களுக்கான பிரிவில் தி பாஸ் பேபி, தி பிரட் வின்னர், பெர்டினாண்ட், லவ்விங் வின்சென்ட், கோ-கோ ஆகிய படங்கள் பரிந்துரையாகி, கோ-கோ திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து படங்களிலும் சற்று வித்தியாசமான அனிமேஷன் படமாக திகழ்ந்தது 'லவ்விங் வின்சென்ட்' திரைப்படம்தான். மற்ற அனிமேஷன் படங்களேல்லாம், காட்சிகள் முதலில் வடிவமைக்கப்பட்டு அதன் பின் கம்ப்யூட்டரில் அசைவுகள் கொடுத்து படம் முழுமையடையும். லவ்விங் வின்சென்ட் படமும் அதே முறையில்தான் எடுக்கப்பட்டது.
ஆனால் இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை ஆயில் பெயின்டிங் செய்து அதன் பின் அதற்கான அசைவுகளை கொடுத்துள்ளனர். இத்திரைப்படம் இது போல் உருவாக மற்றொரு காரணம், இத்திரைப்படம் வின்சென்ட் வான்கா எனும் ஓவியரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. இதில் முக்கியமாக அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதுதான் முக்கியமான பகுதியாகும். இத்திரைப்படத்திற்காக 125 ஓவியர்கள் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் சுமார் 65000 பிரேம்கள் வரையப்பட்டு திரைப்படமாக்கப்பட்டன. இப்படி முழுமையாக ஓவியங்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதானாம்.