கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் என நடிகர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர்கள் கமல், விக்ரம், சரத்குமார், ராதா ரவி, சிவகுமார், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகில் பல பிரிவுகளில் பணியாற்றும் பலரும் கேப்டன் விஜயகாந்தின் மகன்களான விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மன்சூர் அலிகான் பேசுகையில், “விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நான் செயற்குழு உறுப்பினராக அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்த சமயத்தில் என்னிடம் சங்கத்தின் பத்திரத்தை எல்லாம் காண்பித்துள்ளார். இப்போது நடிகர் சங்க கட்டடத்தை கடன் வாங்கி கட்டுகிறார்களா என்று தெரியாது. ஆனால் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்றது போல அனைத்து நடிகர்களையும் அழைத்து விருந்தளித்து உபசரித்து மொய் விருந்து போன்று நடத்தி பணம் வசூலிப்போம். அனைவரும் தங்களால் இயன்ற தொகையை அளிக்கட்டும். கேப்டன் இருந்தபோது நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் இருந்தது. ஆட்சியாளர்கள் கூட பயந்தனர். இல்லாவிட்டால் ஒரு ராமேஸ்வரம் போராட்டத்தை நடத்திக் காட்டி இருக்க முடியுமா ? நெய்வேலி போராட்டத்தை மறக்க முடியுமா ? விஷால், நாசர் உங்களுக்கு சக்தி இருக்கிறது. இனி நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் தமிழ்நாட்டில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. கேப்டன் வளாகத்தில் வருடந்தோறும் கேப்டன் பெயரில் பொங்கல் விழா நடத்த வேண்டும்” என்று கூறினார்.