Skip to main content

"திருமாவளவன் பார்த்துள்ளதால் இப்படம் நியாயத்தை பேசும்..." - கே.எஸ்.ரவிக்குமார்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

ks ravikumar Speech Pudhu Vetham Audio Launch

 

விட்டல்‌ மூவிஸ்‌ தயாரிப்பில் 'காக்கா முட்டை' சிறுவர்கள்‌ விக்னேஷ்‌, ரமேஷ்‌, வருணிகா, சஞ்சனா, இமான்‌ அண்ணாச்சி, சிசர்‌ மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'புது வேதம்'. மேலும் 2 ரூபாய்‌ டாக்டர்‌ ஜெயச்சந்திரன்‌ ஒரு முக்கிய வேடத்தில்‌ நடித்துள்ளார். ராசா விக்ரம்‌ இயக்கியுள்ள இப்படத்திற்கு ரபி தேவேந்திரன்‌ இசையமைத்துள்ளார். விரைவில்‌ இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு திருமாவளவன் எம்.பியும் கலந்துகொண்டு பேசினார். 

 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், "இந்த விழாவுக்கு நெல்லை சுந்தர்ராஜன் செய்த தொல்லையால்தான் வந்தேன். இங்கு வந்தது நல்லாதாகிவிட்டது. எனது பழைய நண்பர்கள், இயக்குநர் வி.சேகர் போன்றவர்களை சந்திக்க முடிந்தது. பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் நடித்த வேதம் புதிது  படத்துக்கு இசையமைத்தவர் தேவேந்திரன். இன்றைக்கு அவரது மகன் புது வேதம் படத்தில் பாடல் இசையமைத்திருக்கிறார். திருமாவளவன் இந்த படத்தை பார்த்திருக்கிறார் என்றால் அடித்தட்டு மக்களுக்கான நியாயத்தை பேசும் படமாகத்தான் இது  இருக்கும் என்று கருதுகிறேன். இப்படம் ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். படம் வெற்றி அடைய வாழ்த்துகள்" என்றார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பேசுகையில், "புது வேதம் படத்தை இயக்குநர் ராசா விக்ரம் எனக்கு திரையிட்டுக் காட்டினார். முழுமையாகப் பார்த்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரியை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும்போது, ‘எல்லோரும் இப்போது சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று படம் எடுக்கிறார்கள்’ என்ற வருத்தத்தை சொன்னார். அப்படிப்பட்ட இந்த திரையுலகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்துடன் படம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

 

ராசா விக்ரம் போன்று சாதி வேண்டாம், மதம் வேண்டாம், எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிப்போம் என புரட்சிகரமான முற்போக்கான சிந்தனையாளர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். அதுதான் நமக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது; ஆறுதல் அளிக்கிறது. இந்த இயக்குநரின் பார்வை இடதுசாரி பார்வையாக இருக்கிறது. முற்போக்கு பார்வையாக இருக்கிறது. ஜனநாயக; சமத்துவப் பார்வையாக இருக்கிறது. எளிய மக்களை உற்று நோக்குகிற ஒரு பார்வையாக இருக்கிறது.

 

ஒருபுறம் சாதிப்பெருமை பேசுபவர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய்  ஊற்றுகிறவர்களாக இருந்தாலும் ஐயன் திருவள்ளுவர், அவ்வைப்பிராட்டி, புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு நாம் சிந்திக்கிறோம். மனித குலத்தை தாண்டி பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் அதுதான் கருணை. அதைத்தான் வள்ளலார் தனிப்பெருங்கருணை என்றார். எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு என்ற ஆன்ம நேயத்தைப் போதித்தவர் வள்ளலார்.

 

காலம் நமக்கு அவ்வப்போது வள்ளலார்களை தந்து கொண்டேயிருக்கும். திரைத்துறையில் எத்தனை சாதிவெறியர்கள் வந்தாலும் மதவெறியர்கள் வந்தாலும் எப்படி படம் எடுத்தாலும் சமூகத்தை எப்படி பாழ்படுத்த நினைத்தாலும் அதெல்லாம் எதிர்கொள்கிற சிந்தனையாளர்களை இந்த சமூகம் தந்துகொண்டே இருக்கும். அந்த காலத்தில் வள்ளலார் கிடைத்தார். இந்த காலத்தில் தந்தை பெரியார் கிடைத்தார், அம்பேத்கர் கிடைத்தார். அவர்கள் தந்த கொள்கைகள் நம்மை வழிநடத்துகின்றன என்பதற்கு சான்றாக இயக்குநர் ராசா விக்ரம் இருக்கிறார்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார்.