ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து, பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரவின் நிழல். 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாகும். இப்படம் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமர், ”பார்த்திபன் சார் எதைச் செய்தாலும் அதை வித்தியாசமாக செய்வார் என்பது எலோருக்கும் தெரியும். வித்தியாசமாக மட்டுமல்ல, வாழ்நாள் சாதனையாகவும் இந்தப் படத்தை செய்திருக்கிறார். இந்தப் படத்தை உழைப்பின் உச்சம் எனச் சொல்லலாம். படம் பார்த்து ரொம்பவும் ஷாக்காகிவிட்டேன். உண்மையிலேயே இது சிங்கிள் ஷாட்தானா என்று சந்தேகம் இருந்தது. மேக்கிங் வீடியோ பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்தது. சிங்கிள் ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய உழைப்பு தேவைப்படும். சினிமாவிற்கு இப்படி ஒரு உச்சத்தை காட்டியதற்காக பார்த்திபன் சார் காலைத் தொட்டு கும்பிடவேண்டும். இதற்கடுத்து அவர் என்ன செய்வார் என்று தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.