
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று(அக்டோபர் 31) வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் கமல் கலந்து கொண்டு பேசியதாவது, “எனக்கு சினிமாவை பொறுத்தவரை 365நாளும் காதலர் தினம்தான். நான் சினிமாவின் காதலன். என்னை போன்றவர்களை என்னால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அது வியாபார நோக்கத்தோடு கண்டுகொள்ளும் அடையாளம் அல்ல. இனம், இனத்தை கண்டுகொள்ளும் அடையாளம். அப்படித்தான் என் வாழ்வை இது வரை நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். அதில் வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் இருக்கிறார்கள். இதில் விருப்பத்தோடு வந்த தயாரிப்பாளர்கள் யாரும் வீண்போவதாக நான் பார்த்ததில்லை. நான் 65 வருஷமாக அதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். இந்த படத்தையும் நான் தயாரிக்க காரணம் விருப்பம்தான்.
ஒரு கதையைப் பார்க்கும் போது இது சினிமாவாக வந்தல் எப்படி இருக்கும்... இதுதான் சினிமா ரசிகனின் உண்மையான அடையாளம். நான் முழுவதுமாக ரசிகர்களை நம்புகிறேன். கொஞ்சமாக என்னை நம்புகிறேன். ஏனென்றால் நானும் ரசிகனாக இருந்தவன். இன்றுவரை அதுவாகத்தான் இருந்துள்ளேன். நடுவில் நீங்க கொடுத்த பட்டம் என்னுடையது அல்ல. எனக்கு இருக்கும் அந்தஸ்து நான் சினிமாவின் காதலன் என்பதுதான். அந்த நிலையில் இருந்துதான் நான் ஒவ்வொரு தயாரிப்பையும் அணுகுகிறேன்.
ஒரு படத்தை 20 வருஷம் கழித்து பாராட்டுவதை விட அன்றைக்கே பாராட்ட வேண்டும். பணத்தை வட்டிக்கு வாங்கி விளையாடும் ஆட்கள் நாங்கள்(வினியோகஸ்தர்). அன்றைக்கு பலன் வந்தால்தான் பெருமை. 20 வருஷத்துக்கு பிறகு வெற்றி கிடைத்திருந்தால் 16 வயதினிலே தயாரிப்பாளர் அன்றைக்கே இறந்து போயிருப்பார். அவர் சினிமாவை பெரிதாக தெரிந்து கொள்ளாமல் தெரிந்தவர்கள் நாலு பேரை வைத்து எடுக்கலாம் என கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு வந்தவர். படத்தை யாரும் வாங்கவில்லை என்றதும் வீட்டை விற்று வினியோகத்துக்குப் போய்விட்டார். இதையெல்லாம் பண்ணாதீங்க, நான் வேணா அடுத்த படம் பண்ணித்தறேன் என சொல்லி பார்த்தோம். ஆனால் அவர் நின்னு விளையாண்டு எங்களுக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்து சென்றார்.
ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு ஒரே காரணம் அவர்களுக்கு(ரசிகர்கள்) பிடிக்கவில்லை. வெற்றியடைந்தால் அதற்கு தந்தையர்கள் நிறைய பேர் முன்வருவார்கள். அதுவும் சந்தோஷம்தான். இந்த படத்தில் ஹீரோ இறந்து போய்விடுவார் என்று எல்லாருக்கும் தெரியும். நாம் எல்லோரும் செத்து போகப் போறது எல்லாருக்குமே தெரியும். யாரும் அதைத் தாண்டி வாழ்ந்ததாக சரித்தரம் இல்லை. ஆனால் இறந்தபிறகு வாழ்ந்ததாக சரித்தரம் இருக்கிறது. காந்தியை புத்தரை நாம் என்றும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதனால் ஹீரோ இறந்துவிட்டால் படம் ஓடாது என நாம்தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
அமரன் பார்த்த போது உங்களுக்கு கண்ணீர் வந்தது. அது இந்திய இராணுவத்தின் வீரம், காதல், தியாகம் அனைத்தையும் புரிந்ததால் வந்த கண்ணீர். முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு நன்றி. அவர்கள் மறந்து போன கவலையை மீண்டும் நினைவுறுத்துவது அல்ல எங்கள் வேலை. முகுந்தால் எங்களுக்கு ஏற்படும் பெருமையை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்” என்றார்.