
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நிறம் மாறும் உலகில்'. இப்படத்தில் பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் 'பிக் பாஸ்' முத்துக்குமரன் , தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், “நானும் இப்படத்தின் இயக்குநரான பிரிட்டோவும் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராக போகிறேன் என்று சொன்னார். நண்பரான எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதி சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான். அறிமுக இசையமைப்பாளரும் , என்னுடைய நண்பருமான தேவ் பிரகாஷின் திறமை - இந்த படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன்.
ஒரு நல்ல திரைப்படத்திற்கான அடையாளமாக நான் எதனை பார்க்கிறேன் என்றால் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கான பங்களிப்பை முழுமையாக செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது தான். அதனால் இந்த படத்தில் படத்தொகுப்பாளரும் கடுமையாக உழைத்திருக்கிறார்.நானும், சாண்டி மாஸ்டரும் எப்போதும் ஜாலியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்போம். அது இந்த படத்தில் சாத்தியமாகி இருக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து இன்னும் பல படங்களில் பணியாற்றுவோம். இந்த திரைப்படத்தில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.