
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என சமீபத்தில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, “தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு இதன்மூலம் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், “உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.