
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று(அக்டோபர் 31) வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் கமல் கலந்து கொண்டு படம் குறித்து நிறைய விஷயங்களைப் பேசினார். அதன் ஒரு பகுதியில் எம்.ஜி.ஆர். சொன்னதை படக்குழுவினருக்கு சொல்வதாக ஒரு விஷயம் பகிர்ந்திருந்தார். கமல் பகிர்ந்த விஷயம், “எனக்கு 21 வயசு இருக்கும். அப்போது எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினேன். என்ன நல்லா போய்டிருக்கா எனக் கேட்டார். பாலச்சந்தர் சார் நல்லா பாத்துட்டிருக்காருன்ணே... என்றேன். நான் நல்ல படம் பண்ணும் போது சொல்றேன்ணே, நீங்க வந்து பார்க்கனும் என்றேன். அதற்கு, ஓ... நல்லா இல்லைன்னு தெரிஞ்சே படம் பண்ணுரியா, அத எப்ப நிறுத்த போறன்னு கேட்டார். அந்த வார்த்தைகள் இன்று வரை என் மனதில் ரீங்கரித்து கொண்டிருக்கும்.
பின்பு அவரிடம், நீங்க நடந்த பாதையில் நானும் நடக்க ஆசைதான், ஆனால் அதற்கு தகுதி இருக்கான்னு தெரியல என்றேன். உடனே அவர், நான் நடந்த படியிலெல்லாம் நீ நடக்க வேணாம், நான் பத்து படி ஏறுனா நீ பதினொன்னு படி ஏறனுமே தவிர முதல்ல இருந்து ஏறக்கூடாது. நம்பிக்கையா பண்ணு, நீ திறமைசாலின்னு சொன்னார். அதையே தான் நான் உங்களுக்கு(படக்குழுவினர்) சொல்கிறேன்” என்றார்.