Skip to main content

சரியா? தர்மமா? நியாயமா? - யோகிபாபு புகார் குறித்து தௌலத் தயாரிப்பாளர்! 

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
yogi babu

 

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு அண்மையில் தனது புகைப்படங்களை விளம்பரப்படுத்தி சில தயாரிப்பாளர்கள் படங்களை விற்றுவிடுகிறார்கள். ஆனால், அந்த படத்தில் எனக்கு அவ்வளவாக ஸ்கோப்பில்லை. இதனால் விநியோகஸ்தர்களும், ரசிகர்களும் தன்னிடம் கோபித்துகொள்வதாக குற்றச்சாட்டு வைத்தார். 

 

இதனிடையே 'தௌலத்' என்னும் படத்தின் போஸ்டரில் யோகி பாபுவை முதன்மைபடுத்தி விளம்பரப்படுத்தப்பட்டது. அந்த போஸ்டரை பகிர்ந்த யோகி பாபு, தனக்கும் 'தௌலத்' படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

 

இதுபற்றி தயாரிப்பாளர் முகம்மது அலி கூறுகையில், 'தௌலத்' படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தின் முக்கிய திருப்பமாக கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சியில் யோகிபாபுவைத் தான் நடிக்க வைக்க வேண்டுமென்று தீர்மானித்து தான் நடிக்க வைத்தோம், அவரும் நல்லபடியாக நடித்து கொடுத்தார். ஆனால், அதன்பின் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக வெற்றி பெற்று பரபரப்பான நடிகராக மாறினார். 

 

அவர் நடித்த காட்சிக்காக டப்பிங் பேச வராமலும் இழுத்தடித்தார். நானும் அவருக்காக 9 மாதங்கள் காத்திருந்தேன். அதன்பின்தான் டப்பிங் பேசி கொடுத்தார். அவர் முன்பே டப்பிங் பேசி முடித்து இருந்தால் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம். அவர் குறித்த நேரத்தில் டப்பிங் பேசாததால் படம் வெளியாக தாமதமாகி மன உளைச்சலும் பண இழப்பும் ஏற்பட்டது. 

 

ஆனால், அதையும் விட நடித்துவிட்டு இப்போது நான் நடிக்கவில்லை என்று கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு நிறுவனத்திடம் விலைபேசி இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்த செய்தி என்னை இடிபோல் தாக்கிவிட்டது. மேலும், அவர் கூறியது போல் அவர் புகைப்படத்தை மட்டும் போஸ்டரில் போட்டு நாங்கள் விளம்பரம் செய்து சம்பாதிக்க நினைக்கவில்லை, அப்படி செய்யவும் மாட்டோம். நான் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்த ஒரு நடிகர் தன்னை விளம்பரம் செய்யக்கூடாது என்று கூறுவது சரியா? தர்மமா? நியாயமா? யார் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சியால் என் மீது பாய்ந்துள்ளார். யோகி பாபு மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை. எந்த நடிகரும் இதுபோல் எந்த தயாரிப்பாளர் வயிற்றிலும் அடிக்க வேண்டாம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்