நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரன குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதில் ஒரு ரசிகர் விஜயகாந்த்திற்குத் தனது உறுப்புகளைத் தரத் தயாராக இருப்பதாக வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் திரைப் பிரபலங்களும் அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பினார்.
இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேடையில் நாற்காலியில் அமர்ந்த அவர் திடீரென்று சரிந்து விழு பார்த்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரைப் பிடித்து உட்கார வைத்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “கேப்டன் விஜயகாந்த்துக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். பிடித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என வேண்டுகோள் வைத்துள்ளார்.