இந்தியாவின் சினிமா மார்கெட் மிகவும் பெரியதாகிவிட்ட நிலையில், வாரா வாரம் ஏதாவது படங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதிலும் இந்த வார ரிலீஸ் நம்மை தலைசுற்ற வைக்கிறது. ஆமாங்க, நேரடி தமிழ் படங்களாக இரு படங்கள் வெளியாகிறது. மேலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இரண்டு படங்கள் ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஜோக்கர் திரைப்படம் நேரடி ஆங்கில படமாகவே வெளியாகிறது.
அக்டோபர் 2ஆம் தேதியில் மூன்று படங்கள் வெளியாகிறது. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள வார் திரைப்படம் ஹிந்தி மொழி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. ட்ரைலரை பார்க்கும்போதே செம ஆக்ஷன் படமாக இருக்கும் என்பது தெரிகிறது. இரண்டாவதாக சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜகபதி பாபு, சுதீப், நயன் தாரா, தமன்னா என இந்திய சினிமாவின் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படமும் நாளை ரிலீஸாகிறது. ட்ரைலரை பார்க்கும்போது தெலுங்கில் வெளியாகும் இன்னொரு பாகுபலியாக இருக்கும் என்று தோன்றவைக்கிறது. மூன்றாவது படம்தான் ஜோக்கர். உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் டிசி காமிக்ஸிலிருந்து வெளியாகும் இந்த படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் உள்ளன. வெனிஸ் திரைப்பட விழாவில் வெளியான ஜோக்கர் திரைப்படம் பல்வேறு பாராட்டுக்களை பெற்றுள்ளதோடு சிறந்த படத்திற்காக கிடைக்கும் தங்க சிங்கம் விருதையும் பெற்றுள்ளது. இதனால் பலரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நான்காம் தேதி ரிலீஸாக இருக்கும் ஜோக்கர் படம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பே இந்தியாவில் வெளியாக இருப்பதால் இந்திய ரசிகர்கள் குஷியோ குஷி!
சரி இந்த இரண்டாம் தேதியை விட்டு வழக்கமான நம்ம வெள்ளிக்கிழமை தமிழ் படங்கள் ரிலீஸ் என்னவென்று பார்த்தால், அது அதுக்குமேல ஷாக் கொடுக்குது. தனுஷ் வேறமாதிரி புதுமையான ஒரு கதாபாத்திரத்தில், அதுவும் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதனால் அசுரன் முதல்பார்வை போஸ்டர் வெளியானபோதில் இருந்தே எதிர்பார்ப்புகள் எகிறின. எனவே இந்த படத்திற்கும் பலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வெக்கை என்னும் நாவலை வைத்து எடுக்கப்பட்ட இப்படம், தமிழ் சினிமாவில் இனி நாவலை மையமாக வைத்து பல படங்களை எடுக்க செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதே தேதியில் வெளியாகும் 100 பெர்சண்ட் காதல் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷ், அசுரன் படத்தில் இசையமைத்திருக்கிறார்.
அதே நேரம் அங்காமளி டைரீஸ் என்னும் மலையாள படத்தை எடுத்த லிஜோ ஜோஸ் பெலிஸ்ஸெரியின் ஜல்லிக்கட்டு படம் பல சினிமா காதலர்கள் மற்றும் மலையாள படம் காதலர்களின் எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. இந்த படம் மிகவும் குறைந்த தியேட்டர்களிலேயே வெளியானாலும் இத்தனை படங்களுக்கு நடுவில் வெளியாகிறது. ஆக மொத்தம் சினிமா காதலர்களின் மைண்ட் வாய்ஸ் “வந்தா மொத்தமா வாங்க, இல்லாட்டி ஒருத்தனும் வராதீங்க”