விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்துள்ள ராட்சசன் படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது. அப்போது அதில் கலந்துகொண்ட நடிகை அமலாபால் மீடூ மொமெண்ட் குறித்து பேசியபோது...
"ஒரு படம் வெற்றி பெற நிறைய ஃபார்முலா இருக்கணும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது, நல்ல கதை இருந்தால் போதும், படம் வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள். ராட்சசன் என்னடைய 35வது படம். என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்ததுக்கு தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. ராட்சசன் படத்தில் எனக்கு ஒரு அழகான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் அனைவருமே கஷ்டப்பட்டோம். படப்பிடிப்பு முடிந்த உடனே படத்தின் இயக்குனர் ராமுக்கு நன்றி தெரிவித்து அவரை அரவணைத்து பாராட்ட சென்றேன்.
ஆனால் அவரோ பதறியடித்து ஓடியேவிட்டார். ரொம்ப சிறந்த மனிதர். நிறைய நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமான விஷ்ணுவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் நான் இந்த படத்தில் நடித்திருக்க முடியாது. மீடூ பற்றி முதலில் ட்வீட் போட்டது நான் தான். எல்லாருக்கும் தெரியும், இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு ஒரு பாலியல் தொல்லை வந்தபோதே நான் சொல்லியிருந்தேன். எனக்கு ஒரு தொல்லை வரும் போது அது பற்றி நான் பேசிவிட்டேன். இது மூடிவைக்கக்கூடிய விஷயம் அல்ல, இந்த மாதிரியான தொல்லைகள் நிறைய இருக்கிறது. சினிமாவில் மட்டும் இல்லை, மற்ற பல துறைகளிலும் இருக்கிறது. இப்போது அதோ அந்த பறவை, ஆடை என இரண்டு நாயகியை மையப்படுத்திய நடிக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம் " என்றார்.