Skip to main content

அவசரப்பட்ட சுஷாந்த்... அதிர வைத்த விஜய் சேதுபதி... அசுரனின் வேட்டை! தேசிய விருது ஹைலைட்ஸ்!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

dhanush

 

திரைத்துறையினருக்கான 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019இல் வெளிவந்த படங்களுக்கான விருதுகள் இவை. கொரோனா காரணமாக தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளில் தமிழ் திரைப்படங்கள் வென்றது 7 விருதுகளை. இது பெருமைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. 

 

இது கூட்டணி பெற்ற அமோக வெற்றி!

 

நடிப்பு அசுரன் தனுஷ் ஏற்கனவே 'ஆடுகளம்' திரைப்படத்துக்காக 'சிறந்த நடிகர்' விருதை பெற்றார். மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்திலேயே 'அசுரன்' திரைப்படத்துக்காக அதே விருதை பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கும் இந்தி நடிகரான மனோஜ் பாஜ்பாயிக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. கலைப்புலி தாணு தயாரித்த 'அசுரன்' வசூலிலும் அசுரன்தான். வடசென்னை குழப்பங்களுக்கு வெற்றிமாறன் கொடுத்த தெளிவான பதில் அசுரன். சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதையும் 'அசுரன்' வென்றுள்ளது.  

 

அதிர வைத்த நடிப்பு!

 

தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளை... எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தி செல்பவர்... விஜய் சேதுபதி. 'ஆரண்ய காண்டம்' புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கை பாத்திரத்தில் இவரது நடிப்பு அனைவரையும் அதிர வைத்தது. ஒரு சிறுவனின் தந்தை... ஆனால் திருநங்கை என்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அந்தப் பாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடித்தது இன்னும் புதுசு. இந்த நடிப்புக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.  

 

அப்பவே அப்படி... 

 

இயக்குனர் பார்த்திபனின் முதல் படமான 'புதிய பாதை' 1990இல் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. அப்போதிருந்தே 'வித்தியாச' வேட்கையுடன் செயல்படும் பார்த்திபனுக்கு அவ்வப்போது வெற்றிகளும் அடிக்கடி தோல்விகளும் வந்தன. 'ஹவுஸ்ஃபுல்' படமும் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. எப்போதும் தளராத பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படம் 'ஸ்பெஷல் ஜூரி' (நடுவர்களின் சிறப்பு விருது) விருதைப் பெற்றுள்ளது. இதே படத்துக்காக 'ஆஸ்கர் நாயகன்' ரசூல் பூக்குட்டி சிறந்த ஒலிக்கலவைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

 

imman

 

அடிச்சு தூக்கு! 

 

உண்மையிலேயே இந்த விருதை பலரும் எதிர்பார்க்கவில்லை. 'விஸ்வாசம்' படத்தின் பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது டி.இமானுக்குக் கிடைத்துள்ளது. இமான் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் கமர்ஷியல் ப்ளாக்பஸ்டரான 'விஸ்வாசம்' அவருக்கு விருது பெற்றுத் தந்தது சர்ப்ரைஸ்தான். இதற்கு முக்கிய காரணம் 'கண்ணான கண்ணே' பாடல். தாமரை எழுதிய இந்தப் பாடல் தந்தை - மகள் கீதமாக தமிழகமெங்கும் ஒலித்தது.

 

யாரு சாமி இவன்!

 

விருது அறிவிப்பு வந்ததும் அனைவரையும் 'யாரு சாமி  இவன்' என்று கேட்க வைத்தவன் சிறுவன் நாக விஷால். 'கே.டி. என்கிற கருப்புதுரை' படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பெற்றிருக்கிறார் இவர். படம் வெளிவந்தபோது மிகுந்த பாராட்டுகளை பெற்றிருந்தாலும் பெரிய கவனத்தை பெறாத இந்தப் படம், நெட்ஃப்ளிக்சில் ஹிட்டாகியிருக்கிறது. தாத்தாவாக மு.ராமசாமியும் சுட்டிப்பையனும் அடிக்கும் லூட்டிகள் படத்தின் ஹைலைட்ஸ்.

 

இது முன்னாடியே தெரியுமே!

 

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மீண்டும் ஒருமுறை பெற்றிருக்கிறார் கங்கனா ரணாவத். மணிகர்ணிகா - தி க்வீன் ஆஃப்  ஜான்சி, பங்கா ஆகிய இரு படங்களில் கங்கனாவின் நடிப்புக்காக இந்த விருது. சில ஆண்டுகளாகவே பாஜக ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்தி வரும் கங்கனாவுக்கு இந்த விருது கிடைக்கும் என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான் என்கின்றனர் கங்கனாவை விமர்சிப்பவர்கள். அதற்கு முன்பே அவர் தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார் என்கிறார்கள் ஆதரவாளர்கள். அடுத்ததாக ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்து தமிழகத்தில் களம் காண்கிறார் கங்கணா.

 

இவரு தமிழ்தான்... ஆனா விருது வாங்குனது தெலுங்குப் படத்துக்கு...

 

சுந்தரம் மாஸ்டரின் மகன்கள் ராஜு சுந்தரம், பிரபு தேவா, நாகேந்திர பிரசாத் மூவரும் ஆட்டத்துக்கு பேர் போனவர்கள். பிரபுதேவா, இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்பட்டு பின்னர் நடிப்பு, இயக்கமென்று பெரிய ரவுண்டடித்து வருகிறார். ராஜு சுந்தரம், முன்பு தமிழின் முன்னனி நடன இயக்குனராக இருந்தார். பின்பு அஜித்தை வைத்து 'ஏகன்' படத்தை இயக்கினார். தற்போது அவரது சிஷ்யர்கள் தமிழ் ஹீரோக்களை ஆட்டுவிக்க, ராஜு தெலுங்குப் பக்கம் சென்றுவிட்டார். மகேஷ்பாபு நடித்த 'மஹார்ஷி' படத்தில் ராஜு அமைத்த நடனத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஏற்கனவே 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜனதா கேரேஜ்' படத்துக்காக தேசிய விருது பெற்றார் ராஜு சுந்தரம்.     
              

மலையாளக் கரையோரம்...

 

முன்பெல்லாம் தேசிய விருதுகளில் மலையாளத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். தற்போது கொஞ்சம் குறைந்தாலும் மலையாளத்தின் இருப்பு எப்போதும் இருக்கிறது. 2019ஆம் ஆண்டின் தேசிய அளவில் சிறந்த படமாக 'மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்' தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மோகன்லால் நடித்துள்ள இந்தப் படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். 2019இல் சென்சார் ஆன இந்தப் படம் இந்த ஆண்டுதான் வெளிவரவிருக்கிறது. பிரியதர்ஷனுக்கும் தேசிய விருதுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெறுபவராகவோ தேர்ந்தெடுப்பவராகவோ பரிந்துரைப்பவராகவோ எப்போதும் இருப்பார். இதே படத்துக்காக பிரியதர்ஷனின் மகன் சித்தார்த் ஸ்பெஷல் எஃபக்ட்ஸுக்கான தேசிய விருதை பெறுகிறார். ‘ஜல்லிக்கட்டு’ என்ற மலையாளப் படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை கிரிஷ் கங்காதரன் பெறுகிறார்.        

 

என்ன அவசரம் சுஷாந்த்?

 

தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டு மறைந்தார். அவரது திடீர் முடிவு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் நடித்த 'சிச்சோரே' படத்துக்கு சிறந்த இந்திப் படத்துக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. செய்தி கேட்ட சுஷாந்த் ரசிகர்கள் 'இன்னும் ரொம்ப நாள் இருந்து பல நல்ல படங்கள் நடிக்கவேண்டியவர். என்ன அவசரம் சுஷாந்த்?' என்று கலங்குகின்றனர். சினிமா பின்புலம் இல்லாமல் பாலிவுட்டில் நுழைந்து புகழ்பெற்றவர் சுஷாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம், பாலிவுட்டில் குடும்பங்களின் ஆதிக்கம் குறித்த விவாதத்தை உண்டாக்கியது.   

 

 

சார்ந்த செய்திகள்