Skip to main content

குற்றம் புரிந்தோரின் சிந்தனையை விரிவாக்கும் ஓர் இடம்  - சிறையின் மறுபக்கம்: 04

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

siraiyin-marupakkam-04

 

'சிறையின் மறுபக்கம்'  தொடரில் 18 வருட சிறைத் தண்டனை பெற்ற தாமோதரன் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

 

1994 ஆம் வருடம். அப்போது எனக்கு மிகவும் இளம் வயது. சின்ன பிரச்சனைகளுக்குக் கூட கை வைக்கும் மனநிலை அப்போது இருந்தது. ஊரில் ஒரு இடத்தில் பிரச்சனை நடந்துகொண்டிருந்தபோது என்னுடைய நண்பன் ஒருவன் அங்கு சென்று அடிதடி ஏற்பட்டிருக்கிறது. அப்போது நான் வீட்டில் தான் இருந்தேன். என் மீதும் வழக்கு பதியப்பட்டது. என்னுடைய அண்ணன் தான் அப்போது எங்கள் குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருந்தார். நான் தவறு செய்யவில்லை என்றாலும் ஸ்டேஷனுக்கு சென்ற உடனேயே என்னை அடித்து உதைத்தனர். 

 

உண்மையில் கொலை நடந்த இடத்திலேயே நான் இல்லை. என்னுடைய நண்பனும் நான் எதுவும் செய்யவில்லை என்று கூறினான். உண்மை என்ன என்பது கடவுளுக்குத் தான் தெரியும். அந்த நிகழ்வு நடந்தபோது நான் வீட்டில் தான் இருந்தேன். நான் தவறு செய்யவில்லை என்று என் அம்மாவுக்குத் தெரியும். ஆனால் அண்ணன் அப்போது வீட்டில் இல்லாததால் அவர் அதை நம்பவில்லை. ஏற்கனவே சிறு சிறு தவறுகளை நாங்கள் செய்து வந்ததால் ஊர் மக்களுக்கு எங்கள் மீது வெறுப்பு இருந்தது. எனவே இந்தக் கொலை சம்பவம் நடந்தபோது அனைவரும் எங்களுக்கு எதிராக இருந்தனர்.

 

என்னுடைய அண்ணன் தான் என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை அடி அடி என்று அடித்தனர். மற்ற குற்றவாளிகள் சரணடைந்த பிறகு என்னையும் ரிமாண்ட் செய்தனர். சிறையில் நான் அடைக்கப்பட்ட போது என்னுடைய நண்பர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். கடலூர் சிறையில் எங்களுக்கு மிகுந்த பயம் ஏற்பட்டது. தூங்கும்போது அடித்துத் தான் எழுப்புவார்கள். அந்த ஒரு நாளை என்னால் என்றும் மறக்க முடியாது. சட்டம் என்றால் என்ன, போலீஸ் என்றால் என்ன என்று எதுவும் தெரியாத வயது அது. வயதும் போய்விட்டது, வாழ்க்கையும் போய்விட்டது.

 

பூமியிலேயே இருக்கும் நரகம் என்றால் அது சிறை தான். வாழ்க்கையில் அனைவரும் ஒருமுறை சிறைக்கு சென்று வர வேண்டும். ஆனால் சிறையே வாழ்க்கையாகி விடக்கூடாது. சிறையில் தான் நம்முடைய சிந்தனை அதிகமாகும். செய்த தவறு குறித்து வருந்தவும் திருந்தவும் முடியும். பரோல் மூலம் கிடைக்கும் வெளியுலகத் தொடர்பு என்பது மிகவும் முக்கியம். நம்முடைய நன்னடத்தை மூலம் தான் அதைப் பெற முடியும். அதை என்னால் பெற முடிந்தது. சிறையில் இரண்டு பேருக்கு இடையில் சண்டை ஏற்பட்டால் இருவரையும் தனித்தனி அறையில் அடைப்பார்கள். சிறைக்குள் சென்ற பிறகும் குற்றம் செய்பவர்களைத் தான் அடிப்பார்கள். உள்ளே வரும்போதே அடிப்பதற்கு அட்மிஷன் அடி என்று பெயர். உள்ளே வந்த பிறகு தவறு செய்யக்கூடாது என்பதற்காக அடிக்கும் அடி அது.

 

நான் சிறையில் அனுபவித்த வேதனையை விட என் குடும்பத்தினர் அனுபவித்த வேதனை தான் அதிகம். நான் சிறையில் இருந்த காலத்தில் என்னுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவராக மறைந்தனர். என் தந்தை இறந்த தகவல் எனக்குத் தாமதமாகத்தான் கொடுக்கப்பட்டது. சிறை நடைமுறைகள் தெரியாததால் என்னால் அப்போது வெளியே வர முடியவில்லை. என்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இழந்ததால் எதற்காக நான் வெளியே வந்தேன் என்று எண்ணி தினம் தினம் வேதனைப்படுகிறேன். தவறே செய்யாமல் நான் சிறைக்குச் சென்றதால் கடவுள் என்னோடு இருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.