Skip to main content

ஏற்காட்டில் பேருந்து விபத்து! - 4 பேர் பலி!!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
A bus overturned in Yercaud and there was a major accident

ஏற்காடு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் முதற்கட்டமாக 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று சென்றது. பின்னர் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6:00 மணியளவில் சேலத்தை நோக்கி மீண்டும் வந்து கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிகப்படியான பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்காடு மலையின் 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. மேல்பகுதியில் இருந்து அடுத்த கொண்டை ஊசி வளைவு உள்ள பகுதி சாலை வரை உருண்டோடியது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஏற்காடு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட அனைவரும் கார் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில், இந்தக் கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

சார்ந்த செய்திகள்