Skip to main content

நோபல் விருதும் மர்மமான மரணமும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி # 4

Published on 12/02/2019 | Edited on 19/02/2019

 

 

pp

 

அடுத்த மூன்று ஆண்டுகள் பாப்லோ நெருடா ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்தார். இந்தியா, சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் அவர் பயணம் செய்தார். அவர் சிலியில் இருக்கும்போது, 1946 ஆம் ஆண்டு நெருடாவுக்கு நரம்புப் புடைப்பு நோய் தாக்கியது. அப்போது, அவரைக் கவனித்துக் கொள்வதற்காக மடில்டி உர்ருட்டியா என்ற பெண்ணை நியமித்தார்கள். இவர் சிலி நாட்டில் புகழ்பெற்ற பாடகியாக இருந்தார். அதுமட்டுமின்றி சிலி நாட்டின் முதல் பிசியோ தெரபிஸ்ட்டாகவும் இருந்தார். நெருடாவின் எழுத்துகள் மீது காதல்கொண்டிருந்த இவர், நெருடாவையும் காதலிக்கத் தொடங்கினார்.

 

pp

 

 

தனது இரண்டாவது மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக இருவரும் தங்கள் உறவை வளர்த்து வந்தார்கள். நெருடா ஐரோப்பாவிலும் இந்தியா இலங்கை சென்றபோதும், உர்ருட்டியா அவரை நிழல்போல தொடர்ந்தார். இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளில் இணைந்து திரிந்தனர்.

 

தனது இரண்டாவது மனைவி மனம் வருத்தப்படும் என்பதற்காகவே அவரை விவாகரத்து செய்யாமல் உர்ருட்டியாவுடன் தொடர்பில் இருந்தார். அவர் மீது கொண்ட காதலால் எழுதிய கவிதைகளை கேப்டனின் கவிதைகள் என்ற தலைப்பில் புத்தகமாக்கினார். ஆனால், தனது இரண்டாவது மனைவி வருத்தப்படுவார் என்பதால் 1961 ஆம் ஆண்டுவரை வெளியிடுவதை தவிர்த்தார். 100 காதல் கவிதைகள் என்ற புத்தகத்தையும் இவருக்கு அர்ப்பணித்தார் நெருடா.

 

சிலி தலைநகர் சாண்டியாகோவில் லா சாஸ்கோனா என்ற பெயரில் ஒரு வீடு கட்டினார். அதில்தான் இருவரும் ரகசியமாக வாழ்க்கை நடத்தினார்கள். அந்த வீட்டில் ஒரு ஓவியம் இருக்கிறது. அந்த ஓவியத்தில் உர்ருட்டியாவின் தலைமுடியில் நெருடாவின் முகம் மறைந்திருக்கும்.

 

pp

 

 

நெருடாவை விட 20 வயது மூத்தவரான இரண்டாவது மனைவி டெலியா தனது கணவரின் காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டார். உடல்நிலை மோசமான நிலையில் நெருடாவின் நன்மைக்காக விலகுவது என்று முடிவெடுத்தார். அதன்பிறகு இருவரும் இணைந்து வாழ்ந்தனர். 1966 ஆம் ஆண்டு முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

 

இதற்கிடையில் 1952 ஆண்டு சிலியின் கொன்ஸலேஸ் விடெலா அரசு ஊழல் மலிந்து செல்வாக்கு இழந்தது. சிலி சோசலிஸ்ட் கட்சி சார்பில் சல்வடார் அலெண்டே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். அந்த ஆண்டு செப்டம்பரில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெண்டேயை ஆதரித்து நெருடா பிரச்சாரம் செய்வதற்காக நெருடா ஆகஸ்ட் மாதமே சிலி திரும்பினார். அதற்கு சில மாதங்கள் முன்னதாகவே அவருடைய இரண்டாவது மனைவி டெலியா சிலி திரும்பியிருந்தார். இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்தனர். இந்த சமயத்தில்தான் உர்ருட்டியாவுடன் நெருடாவுக்கு இருந்த தொடர்பை டெலியா அறிந்தார். அதைத்தொடர்ந்து அவர் நெருடாவை விட்டு பிரிந்தார். உர்ருட்டியாவும் நெருடாவும் அதன்பிறகு இத்தாலி வந்தனர். இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு பயணம் செய்தனர். 

 

இந்த காலகட்டத்தில்தான் நெருடாவின் கவிதைகள் உலகப்புகழ் பெற்றன. அனைத்து முக்கிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டன. இவரது பெயர் 1964 ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்தச் சமயத்தில் நெருடாவுக்கு எதிராக பல்வேறு போலியான குற்றச்சாட்டுகளை சிஐஏ பரப்பியது. அதன்காரணமாக அந்த ஆண்டு அவருக்கு விருது கிடைக்கவில்லை. தீவிர அமெரிக்க எதிர்ப்பாளரான நெருடாவை நியூயார்க் நகரில் நடைபெற்ற சர்வேதச பெண் மாநாட்டுக்கு அழைத்திருந்தனர். ஆனால், அவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே மாநாட்டு அமைப்பாளரான நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லர் அமெரிக்க ஜனாதிபதி ஜான்ஸனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து நெருடாவுக்கு விஸா வழங்கப்பட்டது. நியூயார்க்கிலிருந்து சிலி திரும்பும் வழியில் பெரு நாட்டில் இறங்கினார். தலைநகர் லிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கவிதைகள் வாசித்தார்.

 

pp

 

 

1967 ஆம் ஆண்டு புரட்சியாளர் சே குவேரா கொல்லப்பட்டவுடன் அவருடைய நினைவாக ஏராளமான கட்டுரைகளை எழுதினார். சே ஒரு மாபெரும் ஹீரோ என்று புகழ்ந்தார். 

 

1970 ஆம் ஆண்டு சிலி திரும்பிய நெருடாவை சோசலிஸ்ட் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது. ஆனால், அதை மறுத்து சல்வடார் அலெண்டேவுக்கு விட்டுக்கொடுத்தார். 1970-ல் அலெண்டே சிலியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிஸ்ட் ஜனாதிபதியாக பதவியேற்றார். அதையடுத்து நெருடா பிரான்ஸ் தூதராக நியமிக்கப்பட்டார். 1970 முதல் 1972 வரை சிலி நாட்டுக்காக ஐரோப்பிய நாடுகள் கொடுத்திருந்த கடன்களை தள்ளுபடி செய்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். 1971 ஆம் ஆண்டு நெருடாவுக்கு நோபல் விருது வழங்கப்பட்டது. அப்போதும், அவருடைய ஸ்டாலின் ஆதரவை முன்வைத்து எதிர்ப்பிரசாரம் செய்தார்கள். ஆனாலும் அவருக்கு விருது கிடைத்தது.  1972 ஆம் ஆண்டு கடைசியில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. சிலி திரும்பிய நெருடா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தச் சமயத்தில் அலெண்டே அரசுக்கு எதிராக அமெரிக்காவின் கைக்கூலியாக ராணுவத்தளபதி பினோசெட் மாறினார். அரசுக்கு எதிராக கலகம் செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நெருடாவையும் கொல்ல பினோசெட் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் நெருடாவின் உடலில் டாக்டர்கள் விஷம் செலுத்தியதாக நெருடாவின் டிரைவர் மேனுவல் அரயா தெரிவித்தார். ராணுவ அரசில் இருக்க பிடிக்காத நெருடா, வெளிநாடு செல்ல திட்டமிட்டார். மருத்துவ காரணங்களுக்காக அவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டார். தனது அரசின் மிகப்பெரிய எதிரியாக அவர் மாறக்கூடும் என்று பயந்த பினோசெட் அரசு, அவரை திட்டமிட்டே கொன்றதாக கூறுகிறார்கள். நெருடா, பிரேசில் தப்பியிருந்தால், வெளிநாட்டிலேயே நாடுகடந்த சிலி அரசாங்கத்தை நிறுவ திட்டமிட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.

 

மரணமடைந்த நெருடாவுக்கு அஞ்சலி செலுத்தக்கூட ராணுவ அரசு தடை விதித்திருந்தது. ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி, மக்கள் அணிஅணியாக நெருடாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். இந்த இறுதி ஊர்வலத்தை ராணுவ அரசுக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கு பயன்படுத்த மக்கள் முடிவெடுத்தனர். 

 

pp

 

 

அவருடைய மரணத்துக்கு பிறகுதான், மூன்றாவது மனைவி உர்ருட்டியா நெருடாவின் நினைவுக் குறிப்புகளை புத்தகமாக வெளியிட்டார். 

 

 

 

முந்தைய பகுதி:
 

சிலியை விட்டுத் தப்பித் தலைமறைவான நெருடா...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - #3

 

அடுத்த பகுதி:

கியூபர்களின் உறுதிமிக்க போராட்டம்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி #5