எனது சிலி தேசத்தை, வித்தியாசமான புவியியல் அமைப்புடனும் ஏராளமான செல்வங்களுடனும் இயற்கை அன்னை படைத்திருக்கிறாள். ஆனால், மெல்ல மெல்ல அதன் வளங்களையெல்லாம் அள்ளிக்குவிக்கிற மனிதனின் கொள்கையால் எனது தேசம் தனது உரிமைப்பூர்வமான அந்தஸ்திலிருந்து மாற்றப்பட்டிருக்கிறது. தொலைவிலிருந்து கவனிக்கும் ஒருவர், இந்த நாடு தற்கொலை செய்ய விரும்புகிறதோ என்றுதான் நினைப்பார்.
எனது இருப்பிடமான தெற்குப் பகுதியில் வனங்களே பிரதான செல்வமும் ஈர்ப்பு சக்தியும் ஆகும். இந்த அற்புதமான நிலத்தை கப்ரீயேலா மிஸ்ட்ரால் மிகவும் பொருத்தமான முறையில் குளிர்பிரதேசம் என்று அழைத்தார்.
எண்ணற்ற ஓக் மரங்கள், பாப்லார் மரங்கள் மற்றும் இதர வகையைச் சேர்ந்த மிகப்பெரும் மரங்கள் இந்த வனத்தின் பொலிவை அதிகரிப்பவை. சூரிய வெளிச்சமும், மழையும் இந்த வனப்பகுதியை வளமிக்க மண்ணாக மாற்றியுள்ளன. தெற்கு மாகாணங்கள் உலகிலேயே மிக அதிகமாக கோதுமையை உற்பத்தி செய்யும் இடங்களாக இருக்கின்றன.
எழுத்தாளர் இல்யா எஹகரன் பக், நமது தினசரி உணவு என்ற தலைப்பில் எழுதிய நூலில், ஒரு சிலி விவசாயியை குறிப்பிட்டு, இந்த உலகில் மிக அதிகமாக கோதுமையை உற்பத்தி செய்கிற நபர் என்று கூறியிருந்தார். சரிதான், இவை அனைத்தும் கடந்த கால நிகழ்வுகள் இன்றைக்கு சிலி ஒவ்வொரு ஆண்டும் உணவு தானியத்தை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது.
நிலஉடமையாளர்கள் வனப்பகுதியின் பெரும்பாலான பகுதிகளை தீ வைத்து எரித்துவிட்டார்கள். எனது மண்ணின் பெருமையும் அழகும் மறைந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் இந்த தீ பல்லாயிரக்கணக்கான சதுர அடிகளில் மரங்களை காவு கொள்கிறது.
மிகப்பிரம்மாண்டமான காடுகள் கண்முன்னே இருந்ததைப் பார்த்த எங்களுக்கு, தற்போது மரங்கள் எரிந்துபோன மொட்டை நிலத்தை பார்க்க மிகவும் பயங்கரமாக இருக்கிறது. இங்கு இருந்த மரங்கள் வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து நின்றதை நாங்கள் பார்த்து வியந்திருக்கிறோம்.
லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் இத்தகைய மொட்டை நிலங்கள் அடிக்கடி உருவாகி வருகின்றன. எனது சொந்த பிரதேசத்தின் இதயப் பகுதியில். எங்கே எனது கவிதைகள் வளர்ந்ததோ, அங்கே மரங்கள் காணாமல் போய்விட்டன. 15 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், அதாவது மொத்த விவசாய நிலத்தில் 40 சதவீதம் அளவிற்கு மண் நாசமாகிவிட்டது. இதர பகுதிகளில் மணல் கொள்ளையர்கள் மிகுந்த வளமிக்க நிலங்களுக்கு எதிராக தங்களது தாக்குதலை துவக்கியுள்ளார்கள். இவர்களது நாசகர நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த யாருமில்லை. 50 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை இவர்கள் விழுங்கி விட்டார்கள். இதன் விளைவாக சிலியில் உணவு மற்றும் இறைச்சி நுகர்வு வீழ்ந்துவிட்டது. மக்களின் உணவு, குறிப்பாக அன்றாட கூலிகளின் உணவு மிகவும் வீழ்ந்துவிட்டது. இவர்கள் நுகரும் உணவின் அளவும் வீழ்ந்துவிட்டது. வளமிக்க இந்த பிரதேசத்தில் வறுமை தாண்டவமாடுகிறது.
எனது நாட்டின் தெற்கே நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. கடந்த 150 ஆண்டுகால ஜனநாயக ஆட்சியில் (சிலி எந்தவொரு சர்வாதிகாரத்தின் கீழும் இருந்ததில்லை) தாமிரமும் இரும்பும் கொட்டிக்கிடக்கும் சுரங்கங்கள் மிகப்பெரிய அந்நிய நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப் பட்டுவிட்டன. நீண்டகால அடிப்படையில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளால் மிக மோசமான பாடங்களை கற்றுக்கொண்ட பின்னரும்கூட, இந்த வளமிக்க தேசியச் சொத்து, எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மர்மம் நிறைந்த முறையில் அவர்களின் கையிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டு எங்களது சுரங்கங்கள் ஜப்பானிய மற்றும் மேற்கு ஜெர்மானிய முதலாளித்துவவாதிகளால் கைப்பற்றப்பட்டன.
அரை நிலப்பிரபுத்துவ அராஜக அரசுகள் எங்களது காடுகளை அழிப்பதையோ அல்லது அவற்றின் மீது வீடுகள் கட்டுவதையோ தடுத்து நிறுத்த எதையும் செய்யவில்லை. பல நகரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தால் அழிந்துபோயின. அந்நகரங்களில் வாழ்ந்த மக்கள் இன்றைக்கும் தற்காலிக குடிசைகளில், மிகக்கடுமையான காலநிலையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
தேசபக்தியைப் பற்றி பல முக்கிய நிலப்பிரபுத்துவ தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அது தங்களது சொந்த வர்க்கத்திற்கு மட்டுமே அதைச் சொந்தமாக கருதுகிறார்கள். முதலாளித்துவ உலகின் அனைத்து பகுதிகளிலுமே இதுதான் நடக்கிறது. ஆனால் பல்வேறு பாதகமான சக்திகளால் பாதிக்கப்பட்டு நிற்கும் ஒரு நாட்டில், வங்கி அதிகாரிகளும் அதிகார வர்க்கத்தினரும் அடங்கிய அரசை கொண்டிருக்கிற ஒரு நாட்டில், மிகவும் அற்புதமான மக்களால் உருவாகியுள்ள தேசிய வளத்தை பாதுகாப்பதற்கு இவர்கள் கூறும் தேசபக்தி நிச்சயமாக உதவாது, அது ஒரு கொடூரமான நகைச்சுவையாக மட்டுமே இருக்க முடியும். சிலி தேசத்தவர்கள் எந்தவொரு பிரச்சனையையும் எதிர்கொள்ள, அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், தயாராக இருக்கிறார்கள்.
எனினும் சிலி தேசத்து மக்கள் எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருந்தார்கள், அவர்கள், ஆன்டிஸ் மலைத்தொடரின் உயரத்தில் சென்று தாமிரத்தை வெட்டியெடுக்க துணிந்தார்கள். அண்டார்டிகாவிற்கு அருகே எண்ணெய் வயல்களில் வேலை செய்தார்கள், தங்கச்சுரங்கங்களில் வேலை செய்தார்கள்.
எனது நாட்டின் இந்த கடுமையான நிலைமைக்கும் தொழில்வளம் சுருங்கிப்போனதற்கும் எனது மக்களை ஒருபோதும் நான் குற்றம்சொல்ல எண்ணவில்லை, இந்த அனைத்து துயரங்களுக்கும் பொறுப்பு ஆளும் வர்க்கம்தான், ஆளும்வர்க்கத்தின் சுயநலமும், முட்டாள்தனமான ஆதிக்க மனோபாவமும், முன்கூட்டியே கணிக்கும் திறன் இல்லாததுமே ஆகும்.
1964 பொதுத்தேர்தல்கள் சிலி நாட்டின் இந்த நிலைமையை மாற்றும், கம்யூனிஸ்ட்டுகள். சோசலிஸ்டுகள் மற்றும் இதர கட்சியினர் சேர்ந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் முன்னணி, இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்யுமாறு வலியுறுத்துகிறது. லத்தீன் அமெரிக்காவின் முன்னேற்றத்தை விரும்பாத எதிரிகள் ஒன்றுகூடி “வளர்ச்சிக்கான யூனியன்” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர், இது அவர்களது கிரிமினல்தனமான உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது, சிலி மக்கள் இதை உணர்வார்கள், 1964-ம் ஆண்டு தங்களது விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் உரிய தீர்மானகரமான போராட்டத்தை நடத்துகிற ஆண்டு என்பதை அறிவார்கள்.
இழ்வெஸ்தியா,செப்,8,1962
முந்தைய பகுதி:
ரோஜாக்களும் நிலாவும் நமக்கு அந்நியம் அல்ல! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 10
அடுத்த பகுதி:
மலைத்தொடர்களின் மீதொரு விடியல்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 12