சிறையின் இன்னொரு பக்கத்தை சிறையில் இருந்த கைதிகளின் அனுபவங்களின் மூலம் 'சிறையின் மறுபக்கம்' தொடரின் மூலம் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவரின் சிறை அனுபவங்கள் இதோ.
வியாசர்பாடியைச் சேர்ந்த என்னுடைய பெயர் யேசுதாஸ். குடும்பத்தில் நான் தான் மூத்த பிள்ளை. 1995 காலகட்டத்திலேயே ஒரு நாளைக்கு நான் 500 ரூபாய் சம்பாதிக்கும் நிலையில் இருந்தேன். வாழ்க்கை நிம்மதியாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒரு காதலும் இருந்தது. திருமணம் செய்துகொள்ளும் நிலையில் இருந்தபோது தான் இந்த சம்பவம் நடைபெற்றது. என்னுடைய நண்பர் ஒருவரின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அவருடைய அப்பாவுக்கும் மாமாவுக்கும் சண்டை. அப்பாவை மாமா மார்பில் குத்தினார். ஆனால் அப்பாவுக்கு எதுவும் ஆகவில்லை.
அதனால் அவருடைய மாமாவைப் பழிவாங்க வேண்டும் என்று என்னுடைய நண்பர் நினைத்தார். அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று நினைத்து எங்களை அழைத்துச் சென்றார். அவருடைய வீட்டுக்குச் சென்று அவரைக் கொலை செய்தோம். அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றேன். தலைவர்களின் பிறந்தநாளில் எங்களை விட்டுவிடுவார்கள் என்கிற நம்பிக்கையில் இருந்தோம். நான் செய்த குற்றத்தால் என்னுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர். என்னைப் பற்றிக் கவலைப்பட்டே என்னுடைய தந்தை இறந்து போனார். அவருக்கான இறுதிக் காரியத்தைக் கூட என்னால் செய்ய முடியவில்லை.
வெறும் நான்கு சுவற்றுக்குள் எத்தனை நாட்கள் இருக்க முடியும்? அந்த நேரத்தில் தான் நாம் செய்த தவறைப் பற்றி நாம் யோசிப்போம். நான்கு ஆண்டுகள் கழித்து என்னுடைய சகோதரியின் திருமணத்துக்கு நான் பரோலில் வந்தேன். என்னுடைய நல்ல நடவடிக்கைகளினால் எனக்குத் தொடர்ந்து பரோல் கொடுத்தனர். ஒருமுறை பரோலில் வந்து சரியான நேரத்தில் நான் சிறைக்குச் செல்லத் தவறியதால் எங்கள் வீட்டுக்கு போலீஸ் வந்தது. அதன் பிறகு நான் சிறை சென்றேன். ஒருமுறை எங்களுக்கு விடுதலை கிடைக்கும் நிலை ஏற்பட்டது. என்னோடு 11 வருடங்கள் ஒன்றாக இருந்த ஒருவரை வெளியே அனுப்பிவிட்டு என்னை மீண்டும் உள்ளே வைத்தனர்.
பரோலில் நான் செய்த தவறால் ஏற்பட்ட நிலை அது. அப்போது தான் கதறி அழுதேன். தற்கொலை செய்யும் எண்ணம் கூட வந்தது. சிறையில் இருந்தே நான் எம்.ஏ தேர்வு எழுதினேன். அப்போது எனக்கு உதவியவர் பேரறிவாளன். பழகுவதற்கு அவர் ஒரு குழந்தை போன்றவர். நாங்கள் நண்பர்களாக மாறினோம். சிறையில் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தினோம். பொடா வழக்கில் சிறைக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் மீது அவர் மிகுந்த அன்பு செலுத்தினார். நட்பாக பழகினார். சிறையில் கைதிகளுக்கு சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை. எவ்வளவு கெஞ்சினாலும் நீண்ட நேரம் கழித்து தான் சிகிச்சையே வழங்கப்படும்.
சிறையிலேயே டெய்லரிங் கற்றுக்கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தேன். நான் செய்த தவறுக்கான பலனை நான் அனுபவித்து விட்டேன். என்னை ஒரு உதாரணமாக வைத்து இனி யாரும் இதுபோன்ற தவறுகளைச் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். சிறைக்குச் சென்றால் வாழ்க்கையே வீணாகிவிடும். எந்தத் தப்பும் செய்யாமல் அனைவரும் சராசரி மனிதர்களாக சந்தோஷமாக வாழ வேண்டும்.