1910 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிகிற வரை கொரியா தீபகற்பமும் மஞ்சூரியாவும் ஜப்பானியப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பெரும்பகுதி கொரியர்கள் விவசாயத்தை தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால், ஜப்பானிய பேரரசு 1930களில் வடகொரியாவில் சுரங்கங்களையும், நீர்மின் உற்பத்திக்கான அணைகளையும், உருக்காலைகளையும், உற்பத்தித் தொழிற்சாலைகளையும் கட்டியது. மஞ்சூரியாவிலும் தொழிற்சாலைகளை உருவாக்கியது.
கொரியா மற்றும் மஞ்சூரியாவில் தொழிற்சாலை தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக வளர்ச்சி அடைந்தது. கொரியர்கள் மஞ்சூரியாவுக்கும் பரவினர். வடகொரியாவில் மட்டும் 65 சதவீதம் கனரக தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இறுக்கமான தரையாக இருந்ததால் மொத்த நிலப்பரப்பில் 37 சதவீதம் நிலப்பரப்புதான் விவசாயம் செய்யப்பட்டது.
ஜப்பான் எதிர்ப்பில் கொரியா தீபகற்பம் தீவிரமாக இருந்தாலும், வடகொரியாவின் மலைப்பகுதிகளிலும், மஞ்சூரியாவின் உள்ளடங்கிய பகுதிகளிலும்தான் கொரில்லா போராளிக்குழுக்கள் ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தன. ஜப்பானிய பேரரசின் நிர்வாகத்துக்கு மிகப்பெரிய தலைவலியாக இந்த குழுக்கள் இருந்தன. அப்படிப்பட்ட போராளிக் குழுக்களின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக கிம் இல்-சுங் கருதப்பட்டார்.
வடகொரியா எப்போதுமே மேற்கத்திய கோட்பாடுகளை பெரிய அளவில் பின்பற்றியதில்லை. ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியி்ல கொரியாவின் வடமேற்குப் பகுதி மற்றும் பியாங்யாங் நகரம் ஆகியவற்றில் கிறிஸ்தவ மதம் வலுவாக அடித்தளம் அமைத்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் பியாங்யாங் நகரத்தை கிழக்கு உலகத்தின் ஜெருசலேம் என்று அழைத்தார்கள்.
ஜப்பானிய பேரரசின் ஆட்சியை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்தாலும், ஆயிரக்கணக்கான கொரியர்கள் மஞ்சூரியாவுக்கும், சீனாவுக்கும் இடம்பெயர்ந்தனர். கிழக்காசியா முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஜப்பான் முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில்தான், இரண்டாம் உலகயுத்தம் தொடங்கியது.
ஹிட்லரின் ஆதிக்கவெறியின் உச்சமாக ஜெர்மனி ரஷ்யா மீது போர்தொடுத்தது. அதுவே ஹிட்லரின் அட்டூழியத்துக்கு சம்மட்டி அடியாக மாறியது. 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தை ஜப்பான் டோர்பிடோக்கள் தாக்கியதைத் தொடர்ந்து அமெரிக்காவும் களத்தில் குதித்தது. இதையடுத்தே உலகயுத்தமாக மாறியது.
ஜெர்மனியை எதிர்த்து ஐரோப்பாவில் புதிய அணியை அமைக்க வேண்டியது அவசியம் என்று சோவியத் ரஷ்யாவின் ஜனாதிபதி ஸ்டாலின் வற்புறுத்தினார். ஆனால், இதுதொடர்பாக கூட்டம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. வான்வழியே பயணம் செய்ய ஸ்டாலின் முடியாது என்று சொல்லிவிட்டார்.
அதேசமயம் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் சோவியத் யூனியன் சென்று ஸ்டாலினைச் சந்தித்தார். யுத்தத்திற்கு தேவையான உதவிகளை பிரிட்டன் செய்யும் என்று உறுதியளித்தார். அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், சோவியத் ஜனாதிபதி ஸ்டாலின் ஆகிய மூன்று தலைவர்களும் சந்திக்கிற வாய்ப்பு அமையவில்லை. எகிப்தில் சந்திக்கலாம் என்ற முயற்சியும் கைவிடப்பட்டது. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்டாலினின் கை ஓங்கிவிடும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் பயந்தன.
இந்நிலையில்தான் ஈரானை ஜெர்மன் பிடியிலிருந்து விடுவித்த சோவியத் யூனியன், அந்த நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்திலேயே மூன்று நாடுகளின் சந்திப்பை நடத்த உடன்பட்டது. அதைத்தொடர்ந்து, 1943 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற்றது. உடல்நிலை சரியில்லாத அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து டெஹ்ரான் வந்தார். சக்கர நாற்காலியில் அவர் கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்டார். இந்தக் கூட்டத்தில் ஐரோப்பாவில் ஜெர்மனியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மூன்று மாதங்களில் பசிபிக் யுத்தத்தில் ஜப்பானுக்கு எதிராக பங்கேற்போம் என்று முடிவுசெய்யப்பட்டது.
அந்த அடிப்படையில், கிரிமியா நகரமான யால்டாவில் பிப்ரவரி 1945 ஆம் ஆண்டு மீண்டும் மூன்று நாடுகளின் மாநாடு நடைபெற்றது. ஸ்டாலின், சர்ச்சில், ரூஸ்வெல்ட் ஆகியோர் பங்கேற்றனர். ஐரோப்பாவில் யுத்தம் முடிந்த பிறகு நாடுகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது எப்படி? நாடுகளுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்குவது எப்படி என்றெல்லாம் பேசப்பட்டது.
அந்த மாநாட்டைத் தொடர்ந்து, சரணடைந்த ஜெர்மனியின் எதிர்காலத்தை முடிவுசெய்வது குறித்து விவாதிக்க போட்ஸ்டாம் நகரில் மூன்றாவது முறையாக மூன்று வல்லரசுகளின் தலைவர்கள் சந்தித்து விவாதித்தனர். 1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதிவரை இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபராக ஹாரி எஸ்.ட்ரூமேனும், பிரிட்டிஷ் பிரதமராக சர்ச்சிலும், அவரைத் தொடர்ந்து கிளமெண்ட் அட்லீ ஆகியோரும் சோவியத் ரஷ்யா சார்பில் ஸ்டாலினும் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் முடிந்த நிலையில் ஜப்பானுடன் யுத்தத்தை சோவியத் யூனியன் தனியாக தொடங்கியது. கிழக்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரட்டும் சக்திகளோடு சோவியத் யூனியன் இணைந்தது. சீனாவை சீன மக்கள் ராணுவமும், கொரியாவின் வடபகுதியை சோவியத் செஞ்சேனையும் கைப்பற்றின. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பியாங்யாங் நகருக்குள் செஞ்சேனை நுழைந்தது. ஆனால், செப்டம்பர் 8 ஆம் தேதிவரை அமெரிக்கா ராணுவம் தென்கொரியாவை அடையவே இல்லை. கொரியா முழுவதையும் சோவியத் செஞ்சேனை ஆக்கிரமித்துவிடும் என்று அஞ்சிய அமெரிக்கா தனது பங்கிற்கு கொரியாவின் தென் பகுதியை ஆக்கிரமித்தது. கொரியாவை இரண்டாக பிரிக்கும் 38 ஆவது நிலநேர்கோட்டை அளவாகக் கொண்டு இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையாக ஏற்றன. அதன்பிறகு இரண்டு கொரியாக்களும் இணைவது தொடர்பாக அந்த மக்களே முடிவு செய்யட்டும் என்று சோவியத் யூனியன் கூறியது. அதுவரை கொரியா விடுதலைப் போராட்டத்தில் தலைமை வகித்தை தலைவர்களை நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கவும் சோவியத் யூனியன் ஒப்புக்கொண்டது.
ஜப்பான் ராணுவம் 1945 ஆகஸ்ட் 17 ஆம் தேதிதான் சரணடைந்தது. ஆனால், சரணடைவது உறுதியானவுடனே கொரியா முழுவதும் மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் கொரியா விடுதலைக்காக தயாராகிக் கொண்டிருந்தன. செப்டம்பரில் இந்தக் குழுக்கள் கொரியா மக்கள் குடியரசை நிறுவிவிட்டார்கள். இந்தக் குழுக்களை அமெரிக்கா ராணுவம் ஏற்கவில்லை. ஆனால், வடகொரியாவை ஆக்கிரமித்திருந்த செஞ்சேனை பியாங்யாங்கில் இருந்த புகழ்பெற்ற விடுதலை இயக்கத் தலைவர் சோ மேன்-சிக் தலைமையை ஏற்பதாக அறிவித்தது. அங்கிருந்த மக்கள் குழுக்களுடன் செஞ்சேனை இணைந்து பணியாற்றியது. வடகொரியாவின் தலைவராக அவரை ஏற்கவும் சோவியத் யூனியன் தயாராக இருந்தது.
அதன்பிறகு, செப்டம்பர் 19 ஆம் தேதி செஞ்சேனையில் பணிபுரிந்த கிம் இல்-சுங் உள்ளிட்ட 36 கொரிய செஞ்சேனை அதிகாரிகளை வொன்ஸான் நகருக்கு வந்தனர். 1930களில் மஞ்சூரியாவில் ஜப்பான் ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டவர்கள். பின்னர், சோவியத் யூனியன் சென்று செஞ்சேனையில் இணைந்து பயிற்சிபெற்றவர்கள். இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனுக்காக போரிட்டவர்கள்.
அக்டோபர் 14 ஆம் தேதி கிம் இல்-சுங்கை கொரில்லா வீரராக வடகொரியா மக்களுக்கு சோவியத் யூனியன் அறிமுகம் செய்தது. கொரியாவின் இரண்டு பகுதிகளும் ஒரேநாடாக இணைய வேண்டும். மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையை வழங்கவேண்டும் என்று சோவியத் யூனியன் கூறியது. ஆனால், புதிய அரசு அமையும்வரை இருநாடுகளுடன் பொதுவான சில நாடுகளும் இணைந்த குழுவை அமைத்து, ஆலோசனைகளை வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. முதலில் இதை விரும்பாத சோவியத் யூனியன் பின்னர் ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த ஆலோசனைக் குழுவை கொரியா விடுதலைக் குழுக்கள் விரும்பவில்லை. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கொரியாவில் அமெரிக்கா ஆதாரவாளரான சிங்மேன் ரீ நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் விடுதைலப் போராட்டத்தில் ஈடுபடும் தென்கொரிய மக்களை கம்யூனிஸ்ட்டுகள் என்றும் தீவிரவாதிகல் என்றும், தேசதுரோகிகள் என்றும் கொன்று குவிக்க உத்தரவிட்டார். அவருடைய உத்தரவை அமெரிக்க ராணுவம் நிறைவேற்றியது.
வடகொரியாவில் சோவியத் ஆதரவுடன் தலைவராக நியமிக்கப்பட்ட சோ மேன்-சிக்கும் ஆலோசனைக் குழுவை எதிர்த்தார். 1946 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி பியாங்யாங் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆலோசனைக்குழுவை ஏற்க மறுத்து பேசினார். இதையடுத்து அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தென்கொரியாவில் அமெரிக்க சார்பு அரசு அமைந்ததைத் தொடர்ந்து வடகொரியாவிலும் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியதாயிற்று. 1946 பிப்ரவரி 8 ஆம் தேதி அங்கு இயங்கிய மக்கள் குழுக்களை இடைக்கால மக்கள் குழுக்களாக அறிவித்தனர். அந்தக் குழுக்களில் கொரியா கம்யூனிஸ்ட் கட்சியினரும் இடம்பெற்றனர். அதைத்தொடர்ந்து புதிய நிர்வாகம் சார்பில் சில கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. அதாவது, நிலம் அரசுடமையாக்கப்பட்டு மக்களுக்கு சமமாக பிரித்துக்கொடுக்கப்பட்டது. தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டன. தொழிலாளர் நலச்சட்டம் நிறைவேற்றப்பட்டு வேலை நேரம் உரிமைகள் அறிவிக்கப்பட்டன. ஆண்களுக்கு நிகராக பெண்கள் சமத்துவ உரிமைகளைப் பெற்றனர். அரசின் புதிய அறிவிப்புகள் மக்களுடைய ஆதரவைப் பெற்றன. வடகொரியாவில் இருந்த நில உடமையாளர்களும், தொழிலதிபர்களும், பணக்காரக்களும், முதலாளித்துவ ஆதரவாளர்களும் தென்கொரியாவை நோக்கி ஓடினர். அவர்களுக்கு அரசு காலக்கெடு விதித்தது.
இரண்டு கொரியாக்களும் பிரிக்கப்பட்டபோது வடகொரியாவில் 90 லட்சம் பேரும், தென்கொரியாவில் 1 கோடியே 60 லட்சம் பேரும் இருந்தனர். வடகொரியாவில் அரசின் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, கிம் இல்-சுங்கின் தலைமையை கம்யூனிஸ்ட்டுகள் உறுதிப்படுத்தினர். 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வடகொரியா கம்யூனிஸ்ட் கட்சி, 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடகொரியா தொழிலாளர் கட்சியாக உருப்பெற்றது. அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் வடகொரியாவில் டிசம்பர் மாதம் தேர்தலில் போட்டியிட்டது. 1949 ஆம் ஆண்டு வடகொரியா தொழிலாளர் கட்சி, தென்கொரியாவில் இயங்கிய கட்சியுடன் இணைந்து, கொரியா தொழிலாளர் கட்சியாக இணைந்தது. அந்தக் கட்சிக்கு கிம் இல்-சுங் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
வடகொரியாவின் தலைவராக பொறுப்பேற்ற கிம் இல்-சுங், கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து கொரியா மக்கள் ராணுவத்தை நிறுவினார். அந்த ராணுவத்தில் கொரில்லா போராளிகளும், ஜப்பான் ராணுவத்துடன் போரிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களையும் இணைத்தார். சோவியத் பயிற்சியாளர்கள் மற்றும் சோவியத் ராணுவ உபகரணங்கள் உதவியுடன் மிகப்பெரிய ராணுவத்தை உருவாக்கினார். கொரில்லா சண்டைகளிலும், ஊடுருவித்தாக்குவதில் திறன்வாய்ந்த ராணுவமாக அது உருவானது.
சோவியத் யூனியன் பீரங்கிகளையும், ராணுவ வாகனங்களையும், ஆயுதங்களையும், போர் விமானங்களையும் கொடுத்து கொரியா ராணுவத்தை பலம்பொருந்தியதாக மாற்றியது. வடகொரியா வீரர்கள் சோவியத்திலும் சீனாவிலும் போர்விமானங்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டனர்.
முந்தைய பகுதி:
கொரியா இணைப்பை நோக்கிய இறுதி முயற்சி! கொரியாவின் கதை 22
அடுத்த பகுதி:
கிம் இல்-சுங்கின் பாதை தனி பாதை! கொரியாவின் கதை #24