Skip to main content

அமெரிக்காவின் பணத்துக்காக தென்கொரியா வீரர்கள் விற்பனை!!! #16

Published on 05/10/2018 | Edited on 11/10/2018
koreavin kathai

 

தென்கொரியாவின் அடித்தளத்தை வலுவாக அமைத்ததில் பார்க் சுங் ஹீயின் பங்கு முக்கியமானது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்தவர். ஜப்பானின் அடிமையாக கொரியா இருந்த சமயத்தில் பிறந்தவர். இவருடைய சின்ன வயதில் நெப்போலியனை ஹீரோவாக கொண்டு வளர்ந்தவர்.

 

இளம் வயதிலேயே ஜப்பான் நாட்டின் நவீனத்துவ முன்னேற்றத்தில் மனதைப் பறிகொடுத்தவர். டாயேகு நகரில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்துத் தேறி ஆசிரியராக பணியாற்றினார். இந்தச் சமயத்தில்தான் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே இரண்டாவது யுத்தம் தொடங்கியது.

 

உடனே, ஜப்பான் ராணுவ அகாடமியில் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் அவருடைய ராணுவ லட்சியங்களை அறிந்த ஜப்பான் ராணுவ பயிற்சியாளர் அவருக்கு உதவினார். தனது பெயரை டகாகி மஸாவோ என்ற ஜப்பானிய பெயராக மாற்றிக்கொண்டார் பார்க். 1942 ஆம் ஆண்டு ராணுவ பயிற்சியில் முதலிடத்தில் தேறி ஜப்பான் மன்னரிடம் தங்கப்பதக்கத்தை பெற்றார். அதைத் தொடர்ந்து, ஜப்பான் ஏகாதிபத்திய ராணுவப் பயிற்சி கழகத்தி்ல உயர் பயிற்சிக்காக சேர்ந்தார்.

 

koreavin kathai


 

1944 ஆம் ஆண்டு மூன்றாம் வகுப்பில் தேறிய அவர், ஜப்பான் ராணுவத்தில் சேர்ந்து, இரண்டாம் உலகப்போரின் இறுதிக் காலகட்டத்தில் பணியாற்றினார். அப்போது மீண்டும் அவருடைய பெயரை ஒகமோட்டோ மினோரு என்று மாற்றிக் கொண்டார். கொரியாவில் ஜப்பானுக்கு எதிராக சண்டையிட்டுவந்த கொரில்லா போராளிகள் குறித்து உளவறியும் வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார். அதாவது ஜப்பான் ராணுவத்துக்கு கைக்கூலியாக வேலை செய்தார்.

 

இரண்டாம் உலகயுத்தம் முடிந்தவுடன் கொரியாவுக்கு திரும்பினார். கொரியா ராணுவ பயிற்சி கழகத்திலும் பயிற்சி பெற்று 2 ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். அப்போதுதான் அமெரிக்க ராணுவத்தின் கீழ் தென்கொரியா உருவாக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார். சிங்மேன் ரீ தலைமையில் அமைந்த புதிய அரசு, பார்க் ஒரு கம்யூனிஸ்ட் என்று சந்தேகித்து 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதுசெய்தது. விசாரணைக்கு பின்னர் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கொரியா ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலர் அவருடைய தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தண்டனை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, அவர் சம்பளமில்லாத ராணுவசேவையில் ஈடுபடுத்தப்பட்டார். 1950 ஆம் ஆண்டு கொரியா யுத்தம் தொடங்கியவுடன் தென்கொரியா ராணுவத்தில் மேஜராக பதவி ஏற்றார். பய்க் சன்-யுப் என்பவர் அவருக்கு உதவிசெய்தார். அதன்பிறகு லெப்டினன்ட் கர்னல், கர்னல் என்று யுத்தத்தின்போதே அடுத்தடுத்து பதவி உயர்வுபெற்றார். கர்னலாக இருந்த சமயத்தில் ராணுவ தலைமையகத்தின் உளவுப்பிரிவு உதவி இயக்குனராகவும் பதவி வகித்தார். கொரியா யுத்தம் முடிந்தவுடன் தென்கொரியா ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரலாக உயர்ந்தார். போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானதும், அமெரிக்காவில் உல்ள போர்ட் ஸில் என்ற இடத்தில் ஆறுமாத பயிற்சிக்காக தேர்வுபெற்றார்.

 

koreavin kathai



பயிற்சி முடித்து திரும்பிய பார்க் படுவேகமாக தென்கொரியா ராணுவத்தில் முக்கிய பதவிகளை அடுத்தடுத்து பெற்றார். 1960 ஆம் ஆண்டு ராணுவத்தில் முக்கியமான தளபதிகளில் ஒருவரானார். 1960 ஆம் ஆண்டு அதிபர் சிங்மேன் ரீக்கு எதிராக மாணவர்களும் பொதுமக்களும் நடத்திய போராட்டம் காரணமாக அவர் நாட்டைவிட்டு ஓடினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் யுன் போ-சியோன் ஜனாதிபதியாகவும், சாங் மியோன் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அந்த அரசு தொடக்கத்திலிருந்தே குழப்பத்தில் தவித்தது. ஐந்து மாதங்களில் மூன்றுமுறை அமைச்சரவையை மாற்றினார் பிரதமர் சாங் மியோன்.
 

இந்தக் குழப்பத்தில் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். நிர்வாகச் சீர்கேடும் ஊழலும் பெருகின. தினமும் மக்கள் போராட்டம் தொடர்ந்தது. போலீஸ்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயிற்று. ஆளும் அரசு மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. இந்தச் சமயத்தில்தான் மேஜர் ஜெனரலாக இருந்த பார்க் ராணுவ புரட்சிகர குழுவை உருவாக்கினார். சில மாதங்களில் ஓய்வில் செல்லவிருக்கும் நிலையில் அந்தக் குழுவின் திட்டங்களை விரைவுபடுத்தினார். 1961 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

 

koreavin kathai


 

ராணுவ அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட புதிய நிர்வாகம் பார்க்கை ஆதரித்தது. தளபதி சாங் தலைமையில்தான் அந்த நிர்வாகம் அமைய வேண்டும். ஆனால், பார்க்கை அதிகாரிகள் ஆதரித்ததால் சாங் கைது செய்யப்பட்டார். ராணுவத்தின் இந்த நடவடிக்கையை மக்கள் ஆதரித்தனர். ஜனாதிபதியாக இருந்த யுன் ராணுவத்தை ஆதரித்தார். புதிய ராணுவ அரசின் நடவடிக்கைகளில் அமெரிக்க படையோ, கொரியா ராணுவத்தின் வேறு கமாண்டர்களோ தலையிடக்கூடாது என்று யுன் உத்தரவிட்டார்.

 

பார்க் ஜப்பானிய ராணுவ பயிற்சி பெற்றிருந்ததால் தென்கொரியா மக்களையும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ பயிற்றுவிக்க முடிவெடுத்தார். பொறுப்பேற்றவுடன் அவர் செய்த முதல் காரியம், தெருக்களில் பிச்சையெடுத்த, சாலையோரங்களை குடியிருப்பாகக் கொண்ட சிறுவர்களையும் ஆதரவற்றவர்களையும் கைது செய்து அவர்களுக்கு வேலை கொடுக்க உத்தரவிட்டதுதான் என்று கூறுவோர் இருக்கிறார்கள். ஆனால், பிச்சையெடுத்த, ஆதரவற்ற சிறுவர்களையும் முதிரயோரையும் மொத்தமாகக் கொன்று குவித்ததாக இப்போது பல ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து தென்கொரியா தெருக்களே சுத்தமடைந்தன என்று அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். பார்க்கின் நிர்வாகத்தை வளர்ச்சிக்கான சர்வாதிகாரம் என்று தென்கொரியா வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். நாம் முயற்சி செய்தால் எல்லாமும் முடியும். முதலில் நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும் என்பதே பார்க் நிர்வாகத்தின் மையக் கருத்தாக இருந்தது.

 

koreavin kathai


 

1961 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி கொரியா உளவுத்துறை உருவாக்கப்பட்டது. தனது அரசுக்கு எதிராக யாரும் எதிர்ப்புரட்சியில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக பார்க் இதை உருவாக்கினார். பார்க்கின் நிர்வாகத்துக்கு ஜனாதிபதி யுன் ஆதரவாக இருந்தாலும், 1962 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, இடைக்கால ஜனாதிபதியாக தன்னை அறிவித்துக்கொண்டார் பார்க். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஏற்படுத்தும்படி கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு பார்க்கை நிர்பந்தம் செய்தது.

 

இதையடுத்து, பார்க் தனது தலைமையில் ஜனநாயக குடியரசுக் கட்சியை உருவாக்கினார். 1963 ஆம் ஆண்டு தேர்தலை நடத்தினார். அந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி யுன்னை மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் யுன் போட்டியிட்டார். அதிலும் பார்க் வெற்றிபெற்றார்.

 

தென்கொரியாவின் பொருளாதார சீர்குலைவை சரிசெய்ய ஜப்பானுடனான உறவை சீரமைக்கும் வகையில் 1965 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டார். இது ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரித்தது. 1966ல் அமெரிக்காவுடனான உறவை சீரமைக்கும் சில உடன்பாடுகளை செய்துகொண்டார். இந்தச் சமயத்தில்தான் தெற்கு வியட்னாம் மீது வட வியட்னாம் போர்தொடுத்தது. அதைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறியது. அந்தப் போரில் அமெரிக்காவுக்காக போரிடுவதற்காக தென்கொரியா வீரர்களை அனுப்பும்படி அமெரிக்கா கேட்டது. இதற்காக அமெரிக்கா தென்கொரியாவுக்கு நிதியுதவியை வாரி வழங்கியது. அது தென்கொரியாவை வளப்படுத்த உதவினாலும், பணத்துக்காக தென்கொரிய ராணுவ வீரர்களின் உயிரை பணயம் வைத்தார் பார்க். அமெரிக்காவுக்கு ஆதரவாக, 3 லட்சத்து 20 ஆயிரம் தென்கொரியா வீரர்களை அனுப்பினார் பார்க். கிழக்காசியாவில் கம்யூனிஸம் மேற்கொண்டு பரவாமல் தடுக்கவே, தெற்கு வியட்னாமை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா கூறியது. அதை ஏற்றுக்கொண்டே பார்க் தென்கொரியா வீரர்களின உயிரை பணத்துக்காக பணயம் வைத்தார்.

 

koreavin kathai


 

தென்கொரியா ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க அரசு சம்பளம் வழங்கியது. அந்தச் சம்பளம் தென்கொரியா அரசாங்கத்தின் கணக்கில் போடப்படும். இந்த வகையில் நூற்றுக்கணக்கான கோடிக்கணக்கான டாலர்களை மானியமாகவும், கடன்களாகவும், தொழில்நுட்ப பரிமாற்றங்களாகவும், தென்கொரிய பொருட்களுக்கு சந்தை முன்னுரிமை கொடுத்தும் ஜான்ஸன், நிக்ஸன் அரசாங்கங்கள் தென்கொரிய வீரர்களை தெற்கு வியட்னாமில் சாகடித்தன. அதேசமயம், தென்கொரியா பொருளாதார ரீதியாக சீரடைய அந்த வீரர்களின் உயிர்த்தியாகம் உதவியாக அமைந்தது.

(இன்னும் வரும்)

 

முந்தைய பகுதி:


போர் நிறுத்தத்திற்கு பின் தென்கொரியா அரசு!!! கொரியாவின் கதை #15
 


அடுத்த பகுதி:

 

கொல்லப்பட்ட முதல் தென்கொரிய ஜனாதிபதி!!! கொரியாவின் கதை 17
 

 

 

 

சார்ந்த செய்திகள்