Skip to main content

கறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம்! 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை! சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Shiva Ayyadurai

 

"அம்மா... எனக்குப் பள்ளிக்கூடம் போக பிடிக்கவில்லை.. இனி நான் போக மாட்டேன்" என ஒன்பதாம் வகுப்பு படிக்கக்கூடிய சிவா அய்யாதுரை எனும் பெயர் கொண்ட சிறுவன் தன் அம்மாவிடம் கூறுகிறான். நாம் அனைவரும் நம் பள்ளிக்காலத்தில் இதை ஒரு முறையாவது நம் அம்மாவிடமும் கூறியிருப்போம்.

 

நமக்கு அதிகபட்ச காரணம் பக்கத்தில் உள்ள பையன் என்னிடம் சண்டை போடுகிறான், என்னை விட அவன் நல்ல பேனா வைத்திருக்கிறான், அவன் ஊக்குக் குத்தாத டவுசர் போட்டிருக்கிறான் என்பதாகவே இருக்கும். அப்படி அம்மாவிடம் முறையிடும் போது நம் கண்கள் கலங்கியிருக்கும். ஆனால் சிவா அய்யாதுரை, தன் அம்மாவின் முன் நின்றபோது, அவர் கண்களில் வெறுமை இருந்தது. அந்த வெறுமை அவர் அம்மாவிற்கு எதையோ உணர்த்தியது. என்ன காரணம் எனக் கேட்கிறார். கல்லூரி இரண்டாம் ஆண்டுக்கு உரிய கணக்குப் பாடங்கள் வரை படித்து முடித்துவிட்டேன். பள்ளியில் நான் புதிதாகப் படிக்க கணக்குப் பாடம் இல்லை. கணக்குப் பாடம் இல்லாத பள்ளி வகுப்பறை எனக்கு வெறுமையாக இருக்கிறது என்கிறார் சிவா அய்யாதுரை. விஞ்ஞான யுகத்தைப் புரட்டிப்போட்ட இ-மெயில் கண்டுபிடிப்பிற்கான தொடக்க வித்து போடப்பட்ட நாள் அன்றுதான்.

 

ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் என்ற எளிய கிராமத்தில் பிறந்தவர் சிவா அய்யாதுரை. இளம் வயதாக இருக்கும்போதே அவர் குடும்பம் அமெரிக்காவில் குடியேறிவிட்டது. பள்ளிப்படிப்பின் மீது அவருக்கு ஏற்பட்ட வெறுமையை அடுத்து அவர் தாயார் 'லெஸ் மைக்கேல்சன்' என்பவரிடம் அறிமுகப்படுத்துகிறார். சிவா அய்யாதுரையின் திறமையைக் கண்டறிந்து இ-மெயிலைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் லெஸ் மைக்கேல்சன் முக்கியமானவர். பின்னாட்களில் வெள்ளை மேலாதிக்க மனநிலை கொண்ட சிலர் அவரது கண்டுபிடிப்பிற்கு சொந்தம் கொண்டாடி, அதை அபகரிக்க முயன்றபோது அவருடன் இறுதிவரை துணை நின்றவரும் இவரே. இ-மெயில் கண்டுபிடிப்பில் அவரது புத்திக்கூர்மையான செயல்பாடுகளைவிட நமக்கு அதிகம் ஆச்சரியம் அளிப்பது அவரது வயதுதான். ஆம்... டிஜிட்டல் உலகத்திற்கு புதிய தடம் போட்ட இ-மெயிலைக் கண்டுபிடித்த போது அவரது வயது வெறும் 14. இ-மெயில் என்ற தொழில்நுட்பத்தை நான் கண்டுபிடித்தது எப்படி என்று சிவா அய்யாதுரை கூறும் விஷயங்கள், "சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை" எனும் மனநிலையில் இருப்பவர்களுக்குத் தெளிவான பாதையினைக் காட்டும்.

 

"லெஸ் மைக்கேல்சன் எனக்குக் கொடுத்த ஒரு சவாலே இ-மெயில் கண்டுபிடிப்பு ஆனது. அவர் வேலை பார்த்த மெடிக்கல் ஸ்கூலில் மூன்று வளாகங்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் வேறுவேறு இடங்களில் இருந்தன. அங்கே நடக்கும் தகவல் பரிமாற்றம் அனைத்தும் காகிதம் வழியே நடந்தன. ஒவ்வொரு வளாகத்திலும் அதற்கென ஆட்கள் இருப்பார்கள். இன்று இ-மெயிலில் உள்ள இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், கார்பன் காப்பி, டிராப்ட், ட்ராஷ் என அனைத்திற்கும் தனித்தனி பெட்டிகள் இருக்கும். லெஸ் மைக்கேல்சன், இவற்றை அனைத்தையும் மின்னணு வடிவில் மாற்றிக்காட்டு என்றார். கணினியில் ப்ரோக்ராம் செய்வதற்கான மொழிகளில் எனக்குப் புலமை அதிகம் இருந்தது. அதைப் பயன்படுத்தி, கடுமையானத் தொடர் முயற்சிகளுக்கு பின் இதைக் கண்டு பிடித்தேன். இது கண்டுபிடிப்பதில் எனக்கு இருந்த சவால், எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் இதை வடிவமைக்க வேண்டும் என்பதே...."  

 

இ-மெயில் என்ற அபரிமிதமான ஒன்று சிவா அய்யாதுரையால் கண்டுபிடிக்கப்பட்டாலும், கண்டுபிடிப்பு என்றாலே அது மேலைநாட்டினரின் மூளையில் இருந்தே வருமென்ற மனப்போக்கு கொண்ட பெரும்பான்மை உலகம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

 

Ad

 

“அமெரிக்காவில் நான் வளர்ந்தாலும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தப் பிள்ளையாகவே வளர்க்கப்பட்டேன். பெயர், புகழ் இவையெல்லாம் நான் என்றும் எதிர்பார்த்தது இல்லை. இ-மெயில் கண்டுபிடித்தவுடன் நான் அடுத்த ஒன்று குறித்து ஆராய்ச்சி செய்யத்தொடங்கினேன். நான் செய்தது எல்லோராலும் செய்யக் கூடிய சாதாரண ஒன்றுதான் என்று நினைத்தேன். அதனால் அதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை. 35 ஆண்டுகளுக்குப் பின் என் அம்மா இறந்துவிட்டார். அன்று வீட்டைச் சுத்தம் செய்யும் போது என் வீட்டில் இருந்த ஒரு பெட்டியில் இ-மெயிலுக்கான காப்புரிமை, நான் எழுதிய ப்ரோக்ராம் மொழி என அனைத்தும் இருந்தது. அதைப் பார்த்த என் நண்பர் இதுகுறித்து என்னிடம் கேட்டார். நான் விஷயத்தைக் கூறினேன். 'இ-மெயிலைக் கண்டுபிடித்தது நீதான் சிவா' என்றார். அதன் பின்புதான் இது குறித்து எனக்கு நியாபகம் வந்தது. அந்த நண்பர்தான் பின் நாட்களில் அதைப் பத்திரிகைகளுக்கு கொண்டு சென்றார். 

 

பொதுவாக தமிழ், தமிழர் என்று பேசக்கூடிய தீவிரத்தமிழ் ஆர்வலர்கள், உலகத்திற்குப் பல விஷயங்கள் தமிழன் கொடையாகக் கொடுத்ததே என்பார்கள். சில நேரங்களில் அது மிகைப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், விஞ்ஞான யுகத்தில் இதற்கான நேரடி சாட்சியாக சிவா அய்யாதுரை இருக்கிறாரோ என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் இந்தியன், தமிழன், கறுப்புத்தோல் கொண்டவன் என்பதால் உலகம் என்னை அங்கீகரிக்கத் தயங்குகிறது என்கிற வருத்தம் தெரியும். இன்றும் நீங்கள் 'வெள்ளை'மாளிகைக்கு மெயில் அனுப்பினால் உங்களுக்கு ஒரு பதில் மெயில் தானியங்கி முறையில் கணினி அனுப்பும். இதற்கு 'எக்கோ மெயில் சிஸ்டம்' என்று பெயர். இதைக் கண்டுபிடித்தவரும் நம் சிவா அய்யாதுரையே!

 

Nakkheeran

 

ஒவ்வொரு சாதனையாளரின் வாழ்க்கையும் ஒவ்வொரு பாடத்தினைக் கற்றுத்தரும். 'தீர்க்கமான கனவு, கடின உழைப்பு இருந்தால் மட்டும் போதாது. உன்னை நீ விளம்பரப்படுத்திக்கொள்ளாத வரை, நீயும் சிறகுகள் வெட்டப்பட்ட பறவையே' என்பதுதான், சிவா அய்யாத்துரையின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் சேதி. கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!