Skip to main content

என் மகனை சேர்த்துக்கொள்ள மறுத்த மணிரத்னம்! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #11 

Published on 30/09/2018 | Edited on 13/08/2020

 

ramesh kanna sobha old


'செக்கச் சிவந்த வானம்' படம் வெளிவந்தப்போ, 'மணிரத்னம் இஸ் பேக்', 'மணி சார்' கலக்கிட்டார்... இப்படி இப்போ உள்ள இளைஞர்கள் எல்லாம் மணிரத்னம் சாரை கொண்டாடுனாங்க. இத்தனைக்கும் இவர்கள் மணிரத்னத்தின் கோல்டன் பீரியடைப் பார்த்து அனுபவிக்காதவர்கள். யூ-ட்யூபிலும் டிவிடிக்களிலும் பார்த்தவர்கள். நாங்க திரைத்துறையினரா அவரை இருபத்தஞ்சு வருஷமா கவனித்து வருபவர்கள். சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமாவுக்குள்ளும் கூட இளைஞர்கள் பலருக்கு மணிரத்னம்தான் ஆதர்சம், முன்னோடி, மோட்டிவேஷன், இன்ஸபிரேஷன் எல்லாம். என் பையனுக்கும் அப்படித்தான். சொல்லவே இல்லைல? எனக்கு ரெண்டு பசங்க... மூத்த பையன் ஜஸ்வந்த் கண்ணன், இளையவன் பிரஜீஷ் திவாகரன். இதில் பிரஜீஷுக்கு மணிரத்னம்தான் இன்ஸ்பிரேஷன்.

 

நான், சினிமாவை கனவாகக் கொண்டு, அதைத் துரத்திக் கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. இதோ வந்துருச்சு, இதோ வந்துருச்சுன்னு ஏமாற்றி சிறுவனான மகனை நடக்க வச்சு வீட்டுக்குக் கூட்டிப் போற ஏழைத் தந்தை போல என்னைக் கூட்டிப் போனது சினிமா. உண்மையிலேயே ரொம்ப தூரம் அது. அதைக் கடந்துதான் வந்தேன். கடந்த பின்னர் எல்லா வலியும் காமெடி ஆகிடும். இப்போ அப்படித்தான் எனக்கும். நான் ஸ்கூல் படிக்கும்போதிருந்தே நாடகம், நடிப்பு, பாட்டுலதான் என் கவனமே இருந்தது. ஆனால், என் மகன்கள் இருவரையும் நல்லா படிக்க வைக்கணும்னு நானும் என் மனைவி ஷோபாவும் முடிவு பண்ணியிருந்தோம்.

 

ஏவிஎம் ஸ்கூலில் படிச்சாங்க, முடிச்சுட்டு ரெண்டு பேருமே என்ஜினியரிங் படிச்சாங்க. இன்னொரு பக்கம் நான் நடிப்பில் பிசியாகி ஓடிக்கிட்டே இருந்தேன். அப்பப்போ நினைச்சுக்குவேன், 'பசங்க படிச்சு முடிச்சு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குப் போய் வெளிநாடு போய்ட்டா, நாமளும் வயசானதுக்கு அப்புறம் ரெண்டு பசங்க வீட்டுக்கும் போய் மாற்றி மாற்றி இருக்கலாம்'னு. அமெரிக்காவா ஆஸ்திரேலியாவான்னுதான் யோசிப்பேன். அதுக்கேத்த மாதிரியே ரெண்டு பசங்களும் படிச்சு முடிச்சு 'விப்ரோ' நிறுவனத்தில் சேர்ந்தாங்க. பெரியவனுக்கு அமெரிக்கா வாய்ப்பும் வந்தது. ஆனால், இந்த இடத்தில் நாம் ஒன்றை  மறக்கலாமா? வாழ்க்கையில இதுவரைக்கும் எனக்கு ஏதாவது ஒன்னு நினைத்தது போல எதிர்பார்த்த நேரத்தில் நடந்திருக்கா? இல்லைல? அப்புறம் இதை எப்படி எதிர்பார்க்கலாம்?



 

ramesh kanna family


 

மூத்த மகன் ஜஸ்வந்த் கண்ணன் வந்தான். "அப்பா நான் வேலையை ரிசைன் பண்றேன்"னு சொன்னான். "ரிசைன் பண்ணிட்டு?"னு கேட்டேன். "சினிமாவுக்கு வர்றேன்"னான். "நடிகன் ஆவதெல்லாம் ஈஸின்னு நினைக்கிறியா? அதுக்கெல்லாம் பல விஷயங்கள் ஒத்து வரணும்"னு சொன்னேன். நான் பழசை மறக்க முடியுமா?  "பதினஞ்சு வருஷம் ஆச்சுடா நான் ஸ்க்ரீன்ல தலை காட்ட", எப்படியாவது அவன் முடிவை மாற்ற முயன்றேன். "நான் நடிக்கல, டைரக்டர் ஆகணும். அஸிஸ்டண்ட்டா சேர்த்துவிடுங்க" என்றான். எனக்கு ஒன்னும் புரியவில்லை. நான் பட்டதையேதான் இவனும் படணுமான்னு ஒரு பக்கம் கேள்வி. இன்னொரு பக்கம் நமக்கு இல்லாத பல வசதிகள் அவனுக்கு இருக்கு. நாம வெற்றிகரமா படம் இயக்கணும்னு நினைச்சோம். ஒரு படத்துடன் அந்தப் பயணம் திசை மாறிடுச்சு. ஆனால், அவனுக்கு உதவ நாம இருக்கோமே? நினைச்சதை பண்ணட்டும் என்று இன்னொரு பக்கம் பதில். பையன் அவுங்க அம்மாகிட்ட ரொம்ப பிடிவாதமா சொல்லி வேலையையும் கூட விட்டுட்டான்.



 

rk family

பிரஜீஷ் திவாகரன் - ஷோபா - ரமேஷ் கண்ணா - ஜஸ்வந்த் கண்ணன்


 

"சரி வா"னு நேரா ஏ.ஆர்.முருகதாஸ்கிட்ட கூட்டிட்டுப் போனேன். அவனை அறிமுகப்படுத்தி அவனது விருப்பத்தை சொன்னேன். "உங்களுக்கு பண்ணாமலா" என்று ஆவலாக ஏற்றுக்கொண்டார் முருகதாஸ். அதே நேரம் அவர் படம் ஏற்கனவே தொடங்கிடுச்சு. அதுனால தனது உதவி இயக்குனராக இருந்து இயக்குனராகி 'மான் கராத்தே' படம் ஹிட் கொடுத்திருந்த திருகுமரனின் இரண்டாவது படமான 'கெத்து' படத்துல வேலை பார்க்கும் வாய்ப்பை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். அந்தப் படம் முடிந்து முருகதாஸே இயக்கிய ஸ்பைடர் படத்தில் தன் உதவி இயக்குனராகப் பணிபுரிய அழைத்துக்கொண்டார்.

 

அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது என் மகன் ஜஸ்வந்த்துக்கு பிறந்த நாள் வந்தது. ஃபேஸ்புக்ல ஒரு ஃபோட்டோ... என்னனு பார்த்தா மகேஷ் பாபு அவனுக்கு கேக் ஊட்டுறார். நான் அவரை நேரில் பார்த்ததே இல்லை. சரி, மகன் ஓரளவு பாதுகாப்பான பாதையில் முன்னோக்கிதான் போறான் என்ற நம்பிக்கை வந்தது. 'சர்கார்' படத்திலும் வேலை பார்த்தான். கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினோம். 'சர்க்கார்' முடிஞ்சாதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டான். நான் முதல் படம் இயக்கிவிட்டுதான் கல்யாணம் பண்ணுவேன் என்று இருந்தேன். ஆனா, அப்படி எதுவும் நடக்கல. சரி, இதையாவது நடத்துவோமேன்னு குடும்ப வாழ்க்கையில் நுழைந்தேன். நம்ம பையனும் நம்மைப் போலத்தான் சிந்திக்கிறான். சர்க்கார் ஷூட்டிங்கெல்லாம் முடிஞ்சது. திருமணமும் நடந்தது. திருமணம் ட்விட்டரில் ட்ரெண்டானது. எப்படி தெரியுமா? திருமணத்துக்கு தளபதி விஜய் வந்தார். ஆமா... அந்த அளவுக்கு அவரோட அன்பைப் பெற்றுவிட்டான் பையன். ரொம்ப சந்தோஷமா இருந்தது.



 

sarkar team

 

             சர்க்கார் டீமில் ஜஸ்வந்த்


 

பெரிய பையனின் வழி சரியாக இருக்குன்னு சந்தோஷப்படும்போதே, சின்ன மகன் பிரஜீஷ் திவாகரனும் 'நான் வேலையை விடுறேன்'ன்னு சொன்னான். என்னடா இதுன்னு கொஞ்சம் டென்சன் ஆயிடுச்சு. ஆனாலும் அவுங்க பிடிவாதம் உறுதியானது. அண்ணனைப் பார்த்து வந்த வெற்றுப் பிடிவாதமல்ல அது என்று பின்னாடி தெரிஞ்சுகிட்டேன். "என்னை மணி சார்கிட்ட சேர்த்துவிடுங்க"னு சொன்னான். "என்னது மணிரத்னமா? அப்படியெல்லாம் உடனே சேர்க்க மாட்டார், எனக்கெல்லாம் தெரியாது" என்றேன். எங்கள் படங்களைப் போலவே கே.எஸ்.ரவிக்குமார் - மணிரத்னம் டீம்களின் வேலை பாணி, அணுகுமுறை எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனாலும் மணிரத்னம் என் நண்பர்.

 

ஃபெஃப்ஸி தொழிலாளர்கள் போராட்டத்தின் போது இயக்குனர்கள் எல்லாம் ஒன்னாதான் இருந்தோம். நான் அங்க எல்லா ஏற்பாடுகளிலும் முன்னாடி நிப்பேன். இயக்குனரா என் முதல் படம் அந்த ஸ்ட்ரைக்கால் நின்றது. ஆனாலும் ஸ்ட்ரைக்ல முழுமையா இறங்கி வேலை செய்தேன். ஷூட்டிங் நடக்காததால் நாங்க எல்லோரும், டெய்லி போராட்டம் நடக்கும் இடத்துக்குப் போய் பேசுவோம், பேசுவோம், பேசிக்கிட்டே இருப்போம். பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர்னு எல்லோரும் அங்கதான். என் கூட இருக்கவங்க சிரிச்சுகிட்டே இருப்பாங்க. மணிரத்னம் அதிகம் பேசமாட்டார். ஆனா, நான் பேசப் பேச சிரிச்சுகிட்டே இருப்பார். அங்கதான் அவர்கள் எல்லோர்கிட்டயும் பழகும் வாய்ப்பு கிடைச்சது. பாரதிராஜா சார் என்னை தனது தளபதி என்னும் அளவுக்கு சொன்னார், பாலச்சந்தர் சார் என்னை தன் படத்தில் வேலை செய்ய அழைத்தார். இப்படி பல விஷயங்கள் அந்தப் போராட்டத்தால் நடந்தது.


 

arm with prajeesh

 

பிரஜீஷின் குறும்படத்தைப் பாராட்டிய முருகதாஸ்


 

என் மகன் முடிவிலிருந்து மாறுவது போலத் தெரியவில்லை. உறுதியா நின்றான். 'சரி நமக்கு அமெரிக்கா இல்லை'னு மனசை செட் பண்ணிக்கிட்டு மணிரத்னம்கிட்ட அவனை அழைத்துப் போனேன். அவர் அவனைப் பார்த்தார். "ரமேஷ் கண்ணா வழியெல்லாம் ஃபாலோ பண்ணாத, இப்போல்லாம் ட்ரெண்டே மாறிடுச்சு. இப்போ போய் அசிஸ்டென்ட்டா  சேர்ந்து, வேலை பார்த்து எப்போ டைரக்டர் ஆகுறது? கோ... மேக் ஸம் ஷார்ட் ஃப்லிம்ஸ் நோ... நானெல்லாம் அசிஸ்டென்ட்டாவா இருந்தேன்? கோ அஹெட் மேன்" என்று சொல்லி அனுப்பிட்டார். வெளியே வந்து அவன் என்னையே பார்த்தான். "அதான் சொல்லிடார்ல சேர்த்துக்க முடியாதுன்னு? போ, அவர் சொன்ன மாதிரி ஷார்ட் ஃப்லிம் எடு"ன்னு சொன்னேன். அதுக்கும் என்னையே பார்த்தான். அர்த்தத்தோடுதான் பார்த்தான், பணம் வேணும்ல? 

 


 

ccv shoot


 

அவனுக்காகத் தயாரிப்பாளர் ஆனேன். 'தி காட்ஃபாதர்'னு ஒரு குறும்படம் எடுத்தான். கேங்ஸ்டர் படமில்லை... ஒரு முதிய தந்தை, அவரது மகன் இடையிலான ஒரு தருணம்தான் படம். அந்தக் குறும்படம் சீக்கிரமாகவே ஃபேமஸ் ஆச்சு. ஷங்கர் அதை பாராட்டி ட்வீட் போட்டார், முருகதாஸ் அழைத்து பரிசு கொடுத்தார். அவர்கள் நம்ம முகத்துக்காக செய்றாங்கன்னு கூட நினைச்சேன். திடீர்னு ஒரு நாள் சன் டிவியில் இருந்து ஃபோன். "நீங்கதான அந்த குறும்படத்தின் தயாரிப்பாளர்? அதை சன் நியூஸ் தொலைக்காட்சியில் போட அனுமதி வேணும். எங்க எம்.டிக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"னு சொல்றாங்க. அப்போதான் எனக்கு நம்பிக்கை வந்தது, நம்ம பையன் நல்ல ஒரு படம்தான் எடுத்துருக்கிறான் என்று. சன் டிவிக்கு நன்றி.

 

அந்தக் குறும்படம் மணிரத்னத்தையும் சென்றடைந்தது. சீக்கிரமே மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து அழைப்பு வந்து அவரிடம் உதவி இயக்குனராகி, 'காற்று வெளியிடை', 'செக்கச் சிவந்த வானம்' படங்களில் வேலை பார்த்துவிட்டான் பிரஜீஷ். ரெண்டு பேரும் என் அமெரிக்கா ஆசையைத்தான் நிறைவேற்றல. இயக்குனர் ஆசையை டபுளாக நிறைவேற்றுவாங்கன்னு நம்புறேன், என்னை விட சீக்கிரமா...    

முந்தைய பகுதி:

இளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10