தமிழில் ஓர் எழுத்தே ஒரு சொல்லாக வருவதைப் பார்க்கலாம். ஓர் எழுத்தே ஒரு சொல்லாகவும் பயிலுமானல் அதனை “ஓரெழுத்து ஒருமொழி” என்று வழங்குகிறார்கள். இவ்வாறு இலக்கணத்தில் வழங்கப்படும் பெயர்களுக்கு அப்பெயர்களிலேயே விளக்கம் பொதிந்திருப்பதை உணரலாம். ஓர் எழுத்தே ஒரு மொழியாக, சொல்லாகப் பயில்கிறது என்னும் பொருளில் அமைந்ததுதான் “ஓரெழுத்து ஒருமொழி”.
எடுத்துக்காட்டாக, பூ என்னும் எழுத்தை எடுத்துக்கொள்வோம். பூ என்பது உயிர்மெய் வரிசையில் நெடில் எழுத்து. அது செடிகொடிமரங்களின் உறுப்புகளில் ஒன்றாகிய மலர்களைக் குறிப்பிடும் பொருளில் வருகிறது. பூ என்பதற்கு பூப்பாயாக என்னும் வினைச்சொல்லாக ஏவல் பொருளும் உண்டு. அதனால்தான் “பூத்தது, பூக்கிறது, பூத்தாள்” என்று வினைமுற்றாக்குகிறோம்.
பூ என்கின்ற ஓரெழுத்தால் ஆன சொல்லுக்கு என்னென்ன பொருள்கள் உள்ளன என்பதை அறிந்தால் வியப்படைவீர்கள்.
பூ என்பது கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூ என்னும் நால்வகைப் பூக்களுக்கும் பெயராகும் என்கிறது அகராதி. கொடிகளில் பூப்பது கொடிப்பூ என்று தெரிகிறது. முல்லைப்பூ, பூசணிப்பூ போன்றவை கொடிகளில் பூக்கின்றன. கோட்டுப்பூ என்பது என்ன ? மரங்களில் பூக்கும் பூக்களைக் குறிப்பதுதான் கோட்டுப்பூ என்னும் தொடர். பூவரசம்பூ, வேப்பம்பூ, மாம்பூ போன்றவை மரங்களில் பூக்கின்றன. தாமரையும் அல்லியும் நீர்ப்பூக்கள். புதற்பூ என்பது என்ன ? புதல் என்பது நிலத்தைக் குறிக்கும். நிலப்பூக்கள். செடிகளும் புதர்களும் நிலத்தையொட்டி இருப்பவை. அவற்றில் பூப்பவை புதற்பூக்கள்.
பூ என்பதற்கு அழகு, மென்மை, பொலிவு போன்ற பொருள்களும் இருக்கின்றன. பூக்களின் இயல்புகள் அவை என்பதால் அப்பொருள்களிலும் பூ என்னும் சொல் ஆளப்படும். சேவலின் கொண்டையையும் பூ என்று சொல்கிறோம். கொண்டைப்பூ. பூமியைக் குறிக்கும் தனித்தமிழ்ச் சொல் பூ என்பது. பூவுலகு என்பதில் உள்ள பூ பூமியைக் குறிப்பதுதான். பூதலம் என்பதும் புவிதான்.
இருப்பதிலேயே நுண்மையான துகள் பூக்களிலுள்ள மகரந்தத் துகள்தானே ? அதனால் மிகவும் நுண்ணிய துகள்களையும் பூ என்றிருக்கிறார்கள். கண்ணில் வெண்பொட்டு விழுந்துவிட்டால் “கண்ணுல பூ விழுந்துடுச்சு” என்கிறோம். பூ என்பது இங்கே கண் நோயைக் குறிக்கிறது. யானைக்கு நெற்றிப்பட்டம் கட்டுவதையும் பூ என்கிறார்கள். ஒரு போக விளைச்சலும் பூ எனப்பட்டது.
தீப்பொறி பறப்பதையும் மங்கலமாகக் கூறும்பொருட்டு “பூ” என்றிருக்கிறார்கள். தீயைப் பூ என்று சொல்லும் வழக்கு இன்றும் இருக்கிறது. அதனால்தான் திருவிழாவில் அமைக்கப்படும் தீக்குழிகளைப் “பூக்குழி” என்று வழங்குகிறோம். தீயில் இறங்குவதைப் பூமிதித்தல் என்பார்கள். தீச்சட்டியைப் பூச்சட்டி என்பார்கள்.
அகராதியில் பூ என்ற ஒற்றைச் சொல்லுக்கு இருபத்தெட்டுப் பொருள்கள் கூறப்பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றிப் பூ என்ற சொல் எச்சொல்லோடு முன்னே ஒட்டுகிறதோ அதன்வழியே நூற்றுக்கணக்கான சொற்கள் தோன்றியிருக்கின்றன.
ஒற்றை எழுத்தினால் அமைந்த சொல்லுக்கு இத்தனை பொருள்கள் வழங்கப்படும் எனில் அவ்வெழுத்து முன்னும் பின்னும் ஒட்டி எத்தனை சொற்கள் தோன்றக்கூடும் என்று எண்ணிப் பாருங்கள். பூக்காரன், பூக்குடலை, பூக்கூடம், பூங்கா, பூங்காவனம், பூங்காடு, பூங்கதிர், பூச்செண்டு, பூச்சூட்டு, பூஞ்சிட்டு, பூஞ்சிறகு, பூஞ்சோலை, பூந்தாது, பூந்தேன், பூநாகம், பூம்பிஞ்சு, பூமழை, பூமாரி, பூவரசு என்று நாம் கேள்வியுற்ற சொற்களே கைக்கடங்காத எண்ணிக்கையில் இருக்கின்றன.
தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகள் அனைத்தும் அத்துணைச் சிறப்பு மிக்கவை. ஒற்றை எழுத்தினைக்கொண்டு பற்பல பொருள்களில் பயிலும்படி கைக்கொள்ளாத சொற்களாக்கி வைத்திருக்கிறோம். ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாக வரத்தக்க எல்லா எழுத்துகளும் நம் மொழியில் ஓரெழுத்து ஒருமொழியாகப் பயின்றிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எடுத்துக்காட்டாக, கு என்னும் உகர உயிர்மெய்க்குறில் எழுத்தும்கூட ஓரெழுத்து ஒருமொழியாகப் பயின்றிருக்கிறது. கு என்றாலும் பூமிதான். கு என்னும் அச்சொல்லுக்கு இகழ்ச்சி, இன்மை, நீக்கம், நிறம், சிறுமை, தடை போன்ற பல பொருள்கள் காணப்படுகின்றன. இவ்வடிப்படையில் ஒவ்வோர் எழுத்திற்கும் வழங்கத்தக்க பொருள்களைத் தேடி ஆராய்ந்தால் விடுபட்ட பல சொற்களைக் கண்டுபிடித்துவிட முடியும்.
முந்தைய பகுதி: