காலைல தூங்கி எந்திரிச்சு சமகால சம்பிரதாயமா மொபைல எடுத்து பாத்தா வர்ற முதல் நோட்டிஃபிகேஷனே என்ன தெரியுமா?
‘இந்தியால கரோனா எண்ணிக்கை இத்தனை ஆயிரத்த தாண்டிருச்சு. இத்தன பேர் செத்துட்டாங்க. அந்த நாட்ல இத்தன லட்சம் பேருக்கு கரோனா வந்துருச்சு’
ஃபுட்பால் மேட்ச்சோ இல்ல கிரிக்கெட் மேட்ச்சோ பாத்துட்டு இருந்து அப்டியே தூங்கிடுற சமயங்கள்ல, திடீர்னு முழிப்பு வந்து ஸ்கோர் என்னன்னு பாப்போம்ல.. அந்த மாதிரி ஆய்டுச்சு நிலைமை!
இது நமக்குள்ள என்ன மாதிரியான விளைவுகள ஏற்படுத்துதுன்னு தெரிஞ்சுக்க வாட்ஸப்ல ஒரு அஞ்சாறு பேருகிட்ட கேட்டேன்.
‘பயமா இருக்கு மச்சான்..’
‘அவ்ளோ தான் உலகம் அழியப் போகுது.. கன்ஃபார்ம்’
‘வூகான்ல ஆரம்பிச்சு இதோ விருகம்பாக்கம் வரை வந்துருச்சு. நமக்கு வர எவ்ளோ நேரமாவும்?’
‘நானும் தினமும் பாத்துட்டே தான் இருக்கேன். எண்ணிக்கை அதிகமாயிட்டே தான் இருக்கு. நம்பிக்கை குறைஞ்சுட்டே தான் இருக்கு’
நம்மள்ல பல பேருக்கும் இந்த மாதிரி எண்ணங்கள் வந்து போயிருக்கும் தானே? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இவ்ளோ நெகடிவிட்டி தேவையா? அதுவும் இந்த மாதிரியான நேரத்துல? உலகத்த அச்சுறுத்துற பெருந்தொற்றுகள் பல நூற்றாண்டுகள்ல தலைவிரிச்சு ஆடிருக்கு. அடங்கிருக்கு. மனித குலம் இந்த மாதிரி பல செக்பாயிண்ட்ஸ்ஸ கடந்து தான் இப்ப இருக்குற நிலைமைக்கு வந்துருக்கு. அதே மாதிரி இதையும் இந்த உலகம் கடக்கும். நாம கடப்போம். அதுக்கு நடுவுல இவ்ளோ நெகடிவிட்டியோட வாழ வேண்டாமே… அதனால நமக்கு எதிர்மறை எண்ணங்களையும் சோர்வையும் தவிர வேறென்ன கிடைச்சுரப் போகுது?
பாசிடிவ்வா இருந்தா மட்டும்.. எல்லாம் கிடைச்சுருமா? கிடைச்சுராது தான். ஆனா ஒரு லிஃப்ட்ல நீங்க போய்ட்டு இருக்கும்போது அது பாதில நின்னுருச்சுன்னு வைங்களேன்.. அவ்ளோதான் எல்லாம் போச்சுன்னு நீங்க தலைல கைவைச்சுட்டு உக்கார்றதுக்கும், இல்ல உதவி வரும்.. நம்ம வெளிய போயிருவோம்னு நம்பி உக்கார்றதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. உங்க உயிர காப்பாத்துற அளவுக்கான வித்தியாசங்கள் இருக்கு.
‘வரலாற்றுல அப்பப்ப மனித குலம் தன்னை புதுப்பிச்சுகிட்டு அடுத்த கட்டத்துக்கு போகவேண்டிய நேரம் வரும். நம்மளோட பயங்கள துறந்துட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் நம்பிக்கைய கொடுக்க வேண்டிய நேரம் வரும். அந்த நேரம் இதுதான்’
வங்காரி மாத்தய்னு ஒரு சமூக செயற்பாட்டாளர் சொன்ன இந்த வரிகள் மனசுலயே தங்கிருச்சு. இயற்கை தன்னைத் தானே புதுப்பிச்சுக்க ஆரம்பிச்சாச்சு. வெனிஸ் நகர நதிகள்ல இதுவரைக்கு இல்லாத அளவுக்கு சுத்தமான நீர் ஓட ஆரம்பிச்சுருச்சு. வாத்துகள் நீந்த ஆரம்பிச்சுருச்சு. ஜலந்தர்ல இருந்து பல வருஷங்களுக்குப் பிறகு இமய மலை தெரிய ஆரம்பிச்சுருக்கு, புகைகள் குறைஞ்சதால. இத்தனை வருஷமா நகரத்துக்குள்ள வராம இருந்த பறவைகள் வந்துட்டு போக ஆரம்பிச்சுருக்கு. இத்தன வருஷமா நாம ஏற்படுத்துன காயத்துல இருந்து இயற்கையே கொஞ்சம் கொஞ்சமா மீண்டுகிட்டு இருக்கு. நாம?
இந்த டைம நாமளும் நம்ம தவறுகள திருத்திக்கறதுக்கும், ஒரு புது மனுஷனா, மனுஷியா வெளிய வர்றதுக்கு பயன்படுத்திக்கலன்னா, இயற்கை கொடுத்த வாய்ப்ப வேஸ்ட் பண்ண மாதிரிதான அது?
என்ன பண்ணலாம்? முதல்ல நெகடிவ்வா யோசிக்குறத நிப்பாட்டலாம். ஸ்கோர் பாக்குற மாதிரி அப்பப்பட்ட கரோனோ மரண/பாதிப்பு நிலவரத்த பாக்குறத நிப்பாட்டலாம். எப்பவுமே பதட்டமா ஏதாவது ஒரு செய்திய வாட்ஸப் க்ரூப்கள்ல பரப்புறத நிப்பாட்டலாம். இதுதான் உலகத்தோட கடைசி புள்ளின்ற எதிர்மறை எண்ணத்தோட ஒரு நாள துவங்குறத நிப்பாட்டலாம். அட எதுவுமே பண்ணலன்னா கூட எதாவது ஆய்டுமோன்னு பயப்படுறதயாச்சும் நிப்பாட்டலாம்.
இதெல்லாம் என்ன பண்ணக்கூடாதுங்குற லிஸ்ட்டுதான? என்ன பண்ணலாம்ன்ற லிஸ்ட் இல்லையே! ஆமா… ஒரு இக்கட்டான தருணத்துல என்னெல்லாம் பண்ணனும்ன்றத விட என்னெல்லாம் பண்ணக்கூடாதுன்றது தான் முக்கியம். இப்ப இதுலலாம் நம்ம க்ளியர் ஆய்ட்டோம்னு வைங்க… இனிமே நம்மள சுத்தி இருக்குற பாசிடிவ்வான விஷயங்கள பாக்க ஆரம்பிச்சுரலாம். பேச ஆரம்பிச்சுரலாம்.
ஆரம்பிப்போமா?