Skip to main content

ஆஸ்பத்திரியில் ஆட்டோ சங்கர்! - ஆட்டோ சங்கர் #20 

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
auto sankar 20 titleசூரியனை ஜூஸ் பிழிந்த மாதிரி தோற்றம் தந்தது அந்த விஸ்கி; சிப் சிப்பாகப் பருக நெருப்பு சரடாக உள்ளே வழுக்கிக் கொண்டு போனது.   ஆனாலும் போதையை மீறிக்கொண்டு அந்த பயம் உயிரைப் பிசைந்தது. பாட்டிலைச் சரித்து மீண்டும் குடித்தேன். ம்ஹும்...! எவ்வளவு குடித்தாலும் அந்த ஞாபகம் மட்டும் அழியவே இல்லை; கனவுகளில் இடப்படும் முத்தம் மாதிரி ஒரு ரகசிய உறுத்தல் சிந்தனையைக் கசக்கிப் பிழிந்தது.

"உபத்திரா தப்பித்துப் போய்விட்டாள்..! அடடா, அவளை ஒன்றும் நாங்கள் கொலை செய்வதாக இல்லையே! அவளை என்ன, யாரையுமே இனி   கொல்லுவதாக இல்லை... ஏற்கனவே செய்ததே இந்தப்பாடு படுத்தும்போது, இன்னும் வேறா... உபத்திராவை கூப்பிட்டு சமாதானப்படுத்தலாம்.   நிவாரணமாக ஏதாவது பணம் தரலாம் என்பதுதான் உத்தேசம்! இது புரியாமல் அவள் பயத்தில் தப்பிப் போய்விட்டாள். போனவள் யாரிடமாவது   விஷயத்தைச் சொல்லுவாளோ?

கழுத்து முட்டும் அளவுக்குக் குடித்தேன். தட்டுத் தடுமாறி எழுந்து பாரை விட்டு வெளியே வந்து வண்டியை உதைக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் காளையாய் திமிறிக் கொண்டு புறப்பட்டது. தாறுமாறான போதையும் உபத்திரா பயமும் புணரும் பாம்புகளாய் கூட்டணிசேர, திருப்பத்தில்   ஆவேசமாக எதிர்ப்பட்ட காரைக் கவனிக்கவேயில்லை நான்! நெருங்கினதும் பதறி சுதாரித்து ஒதுங்குவதற்குள் அந்த விபத்து நடந்தேவிட்டது.

வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டே......ன்.

கண் விழித்தபோது நான் ஒரு ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடந்தேன். கால், கையை அசைக்க முடியவில்லை. தோள்பட்டை எலும்பு   நொறுங்கியிருந்ததால் அங்கே பேண்டேஜ் இம்சை...! வலது கால் முழுக்க கட்டு போடப்பட்டு ஏதோ ஒரு வெண்ணிற யானையின் கால் போல   தோற்றம் தந்தது. காலை அசைக்க முடியவில்லை. தலையில் வெள்ளை கிரீடம் அணிந்த நர்ஸ் ஓடோடி வந்தாள்!

"காலை அசைக்கக்கூடாது! ஆபரேஷன் பண்ணியிருக்கோம்... இன்னும் ஒரு மாசத்துக்கு படுக்கையைவிட்டு இறங்கக்கூடாது''

என்னது... ஆபரேஷன் செய்திருக்கிறார்களாமே... எப்போது? இந்த ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்தது யார்? எத்தனை நாட்களாயிற்று? இது  என்ன ஆஸ்பத்திரி? நண்பர்களெல்லாம் எங்கே?

ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் என்னைப் பார்த்து நட்பாய்ச் சிரித்தார். குரலில் தேன் தடவிக்கொண்டு பேசினார். தன்னுடைய பெயர் டி.சி.சந்திரன் என சுய அறிமுகப்படுத்திக்கொண்டு வலிக்காமல் கை குலுக்கினார்.

"பயப்படாதீங்க சங்கர்... சீக்கிரம் குணமாயிடும். சரிதானே! ம்... தண்ணி சாப்பிடறது தப்பே இல்லை! ஆனா, அது நம்மை சாப்பிட்டுறக் கூடாது;   அதான் முக்கியம்'' என்று சிரித்தார். அருகாமை ஸ்டாண்டில் க்ளுக்கோஸ் தயக்கமாக சொட்டிக் கொண்டிருந்தது.

"டாக்டர்... எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க...?''

"ஒரு மாசமாவது ஆகும். வீட்டுக்குப்போன பிறகும் ரெண்டு, மூணு மாசமாவது பெட் ரெஸ்ட்ல இருக்கணும். வண்டி ஓட்டறதுக்கு எல்லாம் மூணு   மாசமாவது ஆகணும். தைரியமா இருங்க... தன்னம்பிக்கையும் தைரியமும்தான் முதல் மருந்து... புரியுதா? பழம், பால் சத்துள்ளதா சாப்பிட்டு   உடம்பை முதல்ல பில்ட்-அப் பண்ணுங்க! அதான் பெரிய பட்டாளத்தையே பக்கத்திலேயே வச்சிருக்கீங்களே! நல்லா கவனிச்சுப்பாங்க.''

 

auto sankar 20சிறிது சிறிதாக குணமாகிக் கொண்டு வந்தேன். டாக்டர் பரிபூர்ணமாய் திருப்திப்பட்டார். சத்து மாத்திரைகளும் "பயப்படாதீங்க!'ன்னு அட்வைஸும்  கொடுத்துவிட்டுப் போனார்.

விடுதிப் பெண்கள் அனைவரும் என்னை வந்து பார்க்க விரும்புவதாக மோகன் சொல்லிக் கொண்டிருந்த சமயம் சிவாஜி வியர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தான். முகத்தில் இறுக்கம்! ரூம் மொத்தத்தையும் போதையால் மெழுகினான்.

"அண்ணே... அந்த ரவிப்பய நாம பண்ணின ரெண்டு கொலை பத்தியும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான்'' 

"அய்யோ... அப்புறம்...?'' என்றேன் பதட்டமாக.

"அவன் பாட்டுக்கு ரெண்டு லட்ச ரூபா கொடு. இல்லைன்னா... போலீசுக்கு போவேன்றான்...!''

ப்பூ இவ்வளவுதானா! அந்த மட்டிலும் அவனாகவே வியாபாரம் பேசினானே... தொகையை சற்றுக் குறைத்து பேரத்தை முடித்துவிடலாம். நல்லவேளை!

"இப்ப ரவி எங்கே?''

அவன் சொன்ன பதில் என் பாவக்கணக்கை ஏற்றியது.

முந்தைய பகுதி:

"ரெண்டு லட்ச ரூபாய் கொடுங்க, எதையும் வெளிய சொல்லமாட்டேன்!" - மிரட்டிய துரோகி! ஆட்டோ சங்கர் #19

 

 

 

 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

இருவரின் பகை; நடுங்க வைத்த 17 கொலைகள்! 

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

madurai rowdyism in 20 years

 

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.

 

யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?


காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.

 

madurai rowdyism in 20 years
வி.கே. குருசாமி

 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.

 

madurai rowdyism in 20 years
ராஜபாண்டி

 

இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.

 

2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.

 

2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.

 

madurai rowdyism in 20 years
வெள்ளைக்காளி

 

குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.

 

பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.

 

"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.