Skip to main content

குட்டித் தீவுக்காக நடந்த கொடூரமான யுத்தம்! கொரியாவின் கதை #13

Published on 09/09/2018 | Edited on 19/09/2018
koreavin kadhai13



அமெரிக்காவின் பிடியில் இருந்த தென்கொரியாவிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறவே இல்லை. அங்கு அமெரிக்காவால் தலைமைப் பொறுப்புக்கு திணிக்கப்பட்ட சிங்மேன் ரீ என்பவரை பொம்மையாக வைத்துக்கொண்டு, கொரியா இணைப்புக்கான முயற்சிகளுக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டது. அமெரிக்காவின் தலையீட்டை விரும்பாத மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

வடகொரியா தலைமையில் கொரியா இணைய வேண்டும் என்றும், தென்கொரியா தலைமையில் இணைய வேண்டும் என்றும் தென்கொரியாவில் மக்கள் போராட்டம் தொடர்ந்தது. ஆனால், அந்த போராட்டங்களை சிங்மேன் ரீ அரசு ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கியது. கொரியா இணைப்பு தொடர்பாக தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா எடுத்துச் சென்றது. இதை சோவியத் யூனியன் கடுமையாக எதிர்த்தது.

அந்தச் சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் சோவியத் ரஷ்யாவைக் காட்டிலும் அமெரிக்காவின் செல்வாக்கு கூடுதலாக இருந்தது. எனவே, சோவியத் எதிர்ப்பையும் மீறி கொரியாவில் சுதந்திரமான தேர்தல் நடத்த வகைசெய்து நவம்பர் 14 ஆம் தேதி ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியது. தேர்தலின்போது வெளிநாட்டு படையினர் இருக்கக்கூடாது என்றும் அந்த தீர்மானம் வலியுறுத்தியது. தேர்தலை நடத்துவதற்காக ஒரு கமிஷனையும் ஐ.நா. அமைத்தது. இந்தக் கமிஷனில் ஆஸ்திரேலியா, கனடா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் இருந்தன. ஐ.நா.வின் இந்த ஏற்பாடுகளை சோவியத் யூனியன் புறக்கணித்தது. சுதந்திரமான தேர்தலுக்கு ஐ.நா. உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று அது கூறியது. ஐ.நா. தீர்மானம் தன்னைக் கட்டுப்படுத்தாது என்று சோவியத் யூனியன் விலகியது.

 

general election



சோவியத் யூனியன் பங்கேற்காத நிலையில் தென்கொரியாவில் மட்டும் ஐ.நா. மேற்பார்வையில் தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது. தேர்தல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட கமிஷனின் தலைவராக பணியாற்றிய கே.பி.எஸ்.மேனன் இந்த முடிவுக்கு எதிராக வாதாடினார். தென்கொரியாவில் நிலவும் சூழ்நிலை வலதுசாரி அமெரிக்க ஆதரவு வேட்பாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்று கமிஷனின் உறுப்பு நாடுகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அவர்களுடைய எதிர்ப்பை ஐ.நா. தள்ளுபடி செய்தது.

கொரியாவை ஒன்றினைக்கும் முயற்சி என்றுதான் தேர்தலை அறிவித்தது ஐ.நா.சபை. ஆனால், தென்கொரியாவுக்கு 1948 ஆம் ஆண்டு மே மாதம்10 ஆம் தேதி தனியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து தென்கொரியாவில் பொது வேலைநிறுத்தங்கள் தொடங்கின. 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தன.

ஏப்ரல் மாதம் தென்கொரியாவுக்கு சொந்தமான ஜெஜு தீவில் நடந்த போராட்டமும் அதைத் தொடர்ந்த தென்கொரியாரின் அமெரிக்கா ராணுவம் நடத்திய கொலைவெறியும் மிகக் கொடூரமானது. ஜெஜு தீவில் தென் கொரியா தொழிலாளர் கட்சி என்ற பெயரில் இடதுசாரிகள் இயங்கினார்கள். இந்தக் கட்சி ஒன்றுபட்ட கொரியாவுக்காக போராடியது. தென்கொரியாவுக்கு தனியே தேர்தல் நடத்தினால், இரு நாடுகளின் பிரிவினை நிலைத்துவிடும் என்று இந்தக் கட்சி கருதியது. எனவே, ஐ.நா.வின் தேர்தல் அறிவிப்பை கட்சியின் தலைவர் பாக் ஹான்-யோங் தேர்தலை எதிர்த்து போராட அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பிப்ரவரி 7 ஆம் தேதி 60 முதல் 80 ஆயிரம் பேர் தேர்தலை எதிர்த்து பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் அரசு அலுவலகங்கள் மீதும், போலீஸ் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் தென்கொரியா தொழிலாளர் கட்சியின் கொரில்லா போராளிகள் மார்ச் மாதம்வரை தொடர்ந்து ஈடுபட்டனர்.

 

 

pak hon yong

பாக் ஹான்-யோங்



1948 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி ஜெஜு தீவில் தொழிலாளர் கட்சியின் புரட்சி தொடங்கியது. தீவைக் கைப்பற்றும் நோக்கத்தில் 500 கொரில்லா போராளிகளும், 3 ஆயிரம் ஆதரவாளர்களும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள், முன்பு ஜப்பான் அரசுக்காக வேலை செய்த போலீஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 30 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த புரட்சியை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவர ஜெஜு தீவின் போலீஸ் தலைவர் கிம் இக்-ரியோல் பலமுறை முயற்சி மேற்கொண்டார். ஆனால், அரசுத் தரப்பும், இடதுசாரி தரப்பும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இல்லை. இடதுசாரிகள் முழுமையாக சரணடைய வேண்டும் என்று அரசுத்தரப்பு கூறியது. போலீஸிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு அதிகாரிகள் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று இடதுசாரிகள் வற்புறுத்தினார்கள்.

அமைதி முயற்சி தோல்வி அடைந்ததால் சண்டை தொடர்ந்தது. இடதுசாரிகளின் கொரில்லா தாக்குதலை சமாளிக்க, அமெரிக்கா ஆதரவு ராணுவம் கூடுதல் படைகளை ஜெஜு தீவுக்கு அனுப்பியது. இதையடுத்து, கொரில்லா போராளிகள் வனத்திற்குள்ளும் குகைகளுக்குள்ளும் ஒளிந்தனர். ஏப்ரல் 29 ஆம் தேதி எதிர்பாராத வகையில் ஜெஜு தீவின் கவர்னராக இருந்தவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கொரில்லா போராளிகளுடன் இணைந்தார். இதையடுத்து, அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த வில்லியம் எப்.டீன் என்பவர் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்களை கொன்று குவிக்கும்படி உத்தரவிட்டார்.

மே 10 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் சமயத்திலும் இந்த சண்டை தொடர்ந்தது. தேர்தல் நடைபெற்ற வாரத்தில் கொரில்லாக்கள் தொலைபேசி இணைப்புகளை துண்டித்தனர். பாலங்களை தகர்த்தனர். சாலைகளில் பாறைகளைப் போட்டு தடுத்தனர். மக்களை துப்பாக்கி முனையில் வாக்களிக்கச் செய்யும் முயற்சியை தடுக்க, வாக்காளர்கள் இரவு நேரத்தில் கொரில்லாக்களின் பாதுகாப்பில் வனத்திற்குள் ஒளியும்படி பெண் கொரில்லா போராளிகள் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் அதிகாரிகளில் பலரே பணிசெய்ய மறுத்தனர். கொரில்லாப் போராளிகளின் திடீர் தாக்குதல்கள் தேர்தல் நடவடிக்கைகளை தோல்வியடையச் செய்தது. தென்கொரியா தேர்தலில் ஜெஜு தீவில்தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, இந்தத் தீவுக்கான இரண்டு இடங்களும் காலியாகவே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலை திட்டமிட்டபடி நடைபெறாமல் செய்வதில் கொரில்லாக்கள் வெற்றிபெற்றனர். இது அமெரிக்கா ராணுவத்தை ஆத்திரப்படுத்தியது. கப்பல்படைக்கு சொந்தமான ஜான் ஆர் கிரெய்க் என்ற போர்க்கப்பலை ஜெஜு தீவு அருகே கொண்டுவந்து நிறுத்தியது. வடகொரியாவிலிருந்த கொரில்லாக்களுக்கு ஆதரவு கிடைத்துவிடாமல் தடுப்பதற்காக அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது. கொரில்லாக்கள் தங்கள் நடவடிக்கைகளை ஒத்திவைத்திருந்துவிட்டு, 1948 ஆகஸ்ட்டில் வடகொரியாவில் சோவியத் யூனியன் மேற்பார்வையில் தேர்தலை நடத்தி முடிந்தவுடன், மீண்டும் தாக்குதலை நடத்தினர். ஜெஜு தீவுக்கும் சேர்த்தே இந்தத் தேர்தல் நடைபெற்றது. தென்கொரியாவில் தேர்தல் முடிந்தவுடன் நிலைமை மேலும் தீவிரமடைந்தது. ஜெஜு தீவில் கொரில்லாக்களை ஒழித்து தீவைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்மேன் ரீ தொடங்கினார்.

1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார் சிங்மேன் ரீ. இந்தக் காலகட்டத்தில் ஜெஜு தீவில் ஏராளமான யுத்தக் குற்றங்கள் நிகழ்ந்திருப்பது சமீப ஆண்டுகளில் வெளியான அறிக்கைகளில் தெரியவந்துள்ளன. இந்தக் குற்றங்கள் அனைத்திலும் அமெரிக்காவுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதை மறைக்கும் முயற்சிகள் நடைபெற்றாலும் அது முடியவில்லை.
 

 

jeju island



1948 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ஜெஜு தீவில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்த முதியவர்களை அழித்துவிட்டு, இளைஞர்களையும், இளம்பெண்களையும் கடத்திய அமெரிக்கா ராணுவம், பெண்களை இரண்டுவாரங்கள் கொடூரமான வன்புணர்வுக்கு ஆளாக்கி, பிறகு எல்லோரையும் கொன்றிருக்கிறது.

ஜெஜு தீவைக் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா ராணுவம் எப்படி வெற்றிபெற்றது என்பது குறித்து உண்மை அறியும் கமிஷன் பல்வேறு கட்டங்களாக நடத்திய விசாரணையில் கொடூரமான பல உண்மைகள் வெளிவந்து உலகையே அதிரவைத்தன. ஜெஜு தீவில் இருந்த 90 சதவீதம் கிராமங்களையும் வீடுகளையும் முற்றாக அழித்துவிட்டு, 30 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றுவிட்டு, கொரில்லாக்களை எரித்து அழித்துவிட்டு, வெறும் தீவை மட்டுமே அமெரிக்கா ராணுவம் ஜெஜு தீவை கைப்பற்றி தென்கொரியா அரசிடம் கொடுத்திருக்கிறது.

ஜெஜு தீவில் அமெரிக்கா ராணுவம் தென்கொரியாவுக்காக நடத்திய இந்த அட்டூழியத்தை எதிர்த்தே வடகொரியா தென்கொரியா மீது போர் தொடுத்தது.

(இன்னும் வரும்)

 

அடுத்த பகுதி:

கம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா! கொரியாவின் கதை #14

முந்தைய பகுதி:

ரத்தம் சிந்தாமல் வடகொரியாவில் மக்கள் அரசு! கொரியாவின் கதை #12