மாயப் புறா - முந்தைய பகுதிகள்
நதி செல்லும் பாதையிலேயே அடித்துச் செல்லப்படும் உயிரினம், எங்கோ கரை ஒதுங்கும். இல்லை எனில் கடலில் தஞ்சம் ஆகும். நதி வெள்ளத்தில் இருந்து மீளப் போராடும் உயிரினம், அதன் எதிர்த் திசையில் நீந்திக் கரை சேர முயற்சி செய்யும். அதே போலத்தான் விதி வழியே வாழ்க்கை போகும் போது, அது துன்பப் பெருக்காய் மட்டுமே ஆகும் போது, மனிதன் கரை சேரும் நோக்கில் எதிர் நீச்சலடிக்க முனைகிறான்.
இந்த சூழ்நிலையில் தான் அசோக்கும் எதிர் நீச்சல் போடும் மன நிலைக்கு வந்திருக்கிறான். தன் மன வலிமையைப் பக்கபலமாக கொண்டு, விதியை முறியடித்து முன்னேறும் வேகத்தோடு, தன் வீட்டை விட்டு சங்கவியோடு வெளியே வந்திருக்கிறான்.
கண்ணுசாமி மாமாவோ ’வெளியில் சென்றவன், சென்றவன் ஆகவே இருக்க வேண்டும். வாழ்வில் வென்றவனாக் கூட அவன் வீட்டிற்குத் திரும்பக்கூடாது’ என்று நினைத்தார்.
ஆண்களின் வயதிற்கு ஏற்ப மனநிலை மாறுகிறது. இளவயது ஆண்களின் மனநிலையில் வேகம் இருக்கிறது. தன்னை அவமானப்படுத்தியவர்கள் முன்பு எப்படியாவது வாழ வேண்டும் என்ற வேகம் பிறக்கிறது. அதுதான் இப்போது அசோக்கின் மனதிலும் இருந்தது.
குடும்ப பாரத்தைச் சுமந்து பக்குவப்பட்ட பெருமாளின் மனநிலையில், வேகத்தைவிட நிதானம் இருந்தது. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரைமுறை இருந்தது.
வெளியில் வந்து சுதந்திரக் காற்றை சுவாசித்ததும் அசோக்கும் சங்கவியும், முகத்தில் பொலிவு தோன்ற, இறுக்கம் விலக, மகிழ்வுடன் வீறு கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.
தங்கள் மகளின் வாழ்க்கைப் பாதை எங்கு சென்று முடியுமோ ? என்ற கவலையில், பெருமாளும் அலமேலுவும் நடக்கும் நடையில், சோர்வு இருந்தது. எதிர்காலத்தைப் பற்றிய யோசனை இருந்தது.
பேருந்தில் "பூங்கதவே தாழ் திறவாய்" என்ற அப்போதைய லப்டப் ஹிட் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சங்கவி அடிக்கடி கேட்கும் பாடல் என்றாலும் இன்று ஏனோ அவள் மனத்திரையில் ஏதேதோ மாயபிம்பங்கள் தோன்றி பயம் காட்டின. ’என் சுக துக்கங்களை உங்கள் தோளில் இறக்கி வைக்கிறேன்’ என்பது போல, அசோக்கின் தோளில் மேல் சாய்ந்தாள்.
’நான் உனக்குப் பாதுகாப்பாய் இருக்கிறேன்’ என்பது போல அசோக், சங்கவியின் கைகளை அழுந்தப் பற்றினான். பேருந்தில் அவர்களுக்குள் உணர்வு மொழியில் இப்படியான உரையாடல் நடந்தது.
பெருமாளின் ஊருக்குள் வந்ததும், ஊரே அவர்களை அதிசயமாகப் பார்த்தது. சங்கவி பஸ் ஏறக் காத்திருந்த போது குறி சொன்ன குறத்தி, வேகமாக ஓடிவந்து, சங்கவியைப் பார்த்து, "தாயீ... என் ஜக்கம்மா சொன்ன குறி பொய்க்காது. மவராசியா வாழும்மா" என்றாள்.
"வீட்டாண்ட வா, உனக்குத் துணிமணி தர்றேன்"என்றார் அந்த மன நிலையிலும் அலமேலு. அவர்களை வீட்டு வாசலில் நிற்க வைத்தனர். அதற்குள் அந்தத் தெரு மக்கள் கூடிவிட்டனர். பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி, உரிமையாக உள்ளே சென்று ஆரத்தி கரைத்து எடுத்துவந்து, சூடம் ஏற்றி, மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் சுற்றிவிட்டு, அவர்களை உள்ளே அழைத்தாள்.
ஒரு பெண் உள்ளே வரும்போதே பாலும்-பழமும் எடுத்துக் கொண்டு ஓடிவந்து கொடுத்தாள். கூடி நின்றவர்கள் "என்னடி அலமேலு. அண்ணன் பையன் கல்யாணத்துக்கு போயிட்டு வரேன்னு ஊருக்கு போன நீ, இப்ப என்னடான்னா, உன் பொண்ணு கல்யாணத்தை முடிச்சிட்டு வந்திருக்க?” என்று அதிர்ச்சியாய் கேட்டனர்.
"பத்தோடு பதினொன்னா பல்லக்கு தூக்கப் போனானாம் பரதேசி. பட்டாடை கட்டிப் பல்லக்கில் உட்கார வச்சுதாம் விதி"- என்று கூறிய பவுனு பாட்டி, ”அந்த ராமாயணத்தைப் பொறுமையாச் சொல்றேன்”னு என்று அங்கலாய்த்தாள்.
அந்த வீட்டிற்குள் திடீரென கல்யாணக்கலை வந்தது. மாலை மணந்தது. மகிழ்ச்சிக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
சங்கவிக்கு இவ்வளவு நேரம் மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்தது. அசோக்கும் சங்கவியும் மனதினில் பொத்தி வைத்திருந்த தங்கள் அன்பை எல்லாம் கண்களால் கடத்திக் கொண்டிருந்தனர்.
இவ்வளவு நாட்கள், உயிரினும் மேலாகப் பொத்தி வைத்திருந்த காதல், தனக்கு மட்டுமே உரிமையானவன், தனக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற உரிமையில் அவன்பால் கசிந்தது. அசோக்கிற்கும் சங்கவி மீது திடீரெனக் காதல் உணர்வு பெருக்கெடுத்தது.
எப்படியோ, என்ன மாயமோ, திருமண பந்தத்தில் இணைந்துவிட்டார்கள், அடுத்து, தாம்பத்தியத்தில் அவர்களைச் சங்கமிக்கச் செய்யும் அந்த புனிதமான சடங்குக்கு உண்டான ஏற்பாடுகள்... ரகசியமாக நடந்துகொண்டிருந்தன.
நம் முன்னோர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்களுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். குலம் விருத்தியாகக் கருவைச் சுமக்கும் பெண் மனதில், எந்தவித பய உணர்வும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த சடங்கைப் பெண் வீட்டில் வைக்கின்றனர்.
பெருமாளின் பங்காளி எல்லாம் சேதி கேட்டு வந்து சேர்ந்தனர். வீடு முழுக்க கல்யாண மகிழ்ச்சி ததும்பியது. அண்ணன் கையில் பணம் இருக்குமோ, இருக்காதோ என்ற எண்ணத்தில் பெருமாளின் தம்பி கொஞ்சம் ரூபாய்களை அவர் கையில் திணித்தார். உறவுக்கெல்லாம் கல்யாண விருந்து சாப்பாடு தடபுடலாக நடந்தேறியது.
தனியறையில் அசோக்கும் சங்கவியும் என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
’ஆசைத் தீயெரிய.. ஆனந்தக் குளிரடிக்க....
ஓசையின்றி நெஞ்சிரண்டும் ஒன்றொரு ஒன்றாக...
காதல் மழையடிக்க.. கனவெல்லாம் நனைந்திருக்க...
சாதல்வரை இன்பம் சரஞ்சரமாய்ப் பொங்கியதே..’
-என எங்கோ படித்த கவிதை வரிகளை அசோக்கின் மனம் அசைபோட்டது. ஒருவர் இதயத்தை , மற்றவர் சுமப்பது போல இரு இதயங்களும் வெளியே கேட்கும் அளவிற்கு அதிகமாய்த் துடித்துக் கொண்டிருந்தது.
மௌனத்தை மொழிபெயர்த்ததால் உடல்மொழி ஆனதா? இல்லை உடல்மொழி மௌனமாய் வாசிக்கப்பட்டதா? என்று புரியாத புதிய இலக்கணம் அங்கே ஒரு ஆனந்தக் கூத்தை அரங்கேற்றத் தொடங்கியது.
ஒரு செயல், சிறப்பாக நடந்தாலும் அதிலும் குறை சொல்ல நாலுபேர் இருப்பார்கள். பாழாய்ப்போன மனசு, பாராட்டை விட்டுவிட்டு குறை சொன்னவர்களின் சொற்களையே மனதில் போட்டு உருட்டிக்கொண்டிருக்கும்.
"ஒத்த புள்ளயப் பெத்து, சீர்செனத்தியோட பொண்ணு கல்யாணத்தைப் பண்ணத் துப்பில்லை"- என்று சிலர் பெருமாள் காதுபடப் பேசினர். அதில் ஏற்பட்ட வருத்தம் அவர் முகத்தில் தெரிந்தது.
"மாமா, என்னால தானே உங்களுக்குக் கெட்ட பெயர். என்னை மன்னிச்சிடுங்க மாமா"என்று அவரிடம் வருத்தம் தெரிவித்தான் அசோக்.
"அதெல்லாம் இல்லை மாப்பிள்ளை. நீங்க திரும்ப உங்க வீட்டிற்கு எப்ப போறதுன்னு ஐயர் கிட்ட நல்ல நாள் பார்த்துட்டு, டவுன் வரைக்கும் போயிட்டு வந்திடறேன்" என்று கிளம்பினார் பெருமாள்.
"அம்மா, எனக்கு பயமாக இருக்கு மா. மாமா வீட்டிற்கு போனால் அங்க அத்தையும், தனம் பாட்டியும் என்னை திட்டிக் கிட்டே இருப்பாங்க மா" என்று அழுதாள் சங்கவி.
"சங்கவி, 18 வயது வரைக்கும் உன்னை திட்டாமலா அடிக்காமலா? வளர்த்தேன்" என்று எதிர்கேள்வி கேட்டாள் அலமேலு.
"அம்மா நீங்க திட்டுறது வேறமா. அவங்க திட்டுறது வேற" என்று சிணுங்கினாள்.
"சங்கவி, நான் வேற அவங்க வேற, நம்ம குடும்பம் வேறு அவங்க குடும்பம் வேறன்னு இனி நினைக்காதம்மா. இனிமே அது தான் உன் குடும்பம். நாற்றை ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு பிடுங்கி நடும்போது கொஞ்சம் வாட்டமாத் தான் இருக்கும். அந்த மண்ணில் வேர் பிடிச்சு மண்ணில் இருக்கும் சத்தையும் நீரையும் உறிஞ்சி நிலைச்ச பிறகு, நல்லா வெளைஞ்சு பயிர் வெள்ளாமையைத் தருது. அதுமாதிரிதான் பொம்பளைக்கும். அம்மா வீடுங்கறது நாத்தங்கால். புகுந்தவீடுதான் நடப்படும் வயல். புகுந்த வீடுங்கறது, சுவாசிக்கிற காற்று மாதிரி. அதுதான் நிரந்தரம்”என்று தனக்குத் தெரிந்தபடியெல்லாம் ,மகளுக்கு தைரியம் சொன்னாள் அலமேலு.
வெளியில் சென்று வந்த பெருமாள்,"எல்லாரும் கிளம்புங்க டவுனுக்கு போய்ட்டு வரலாம்" என்று பரபரப்பாக அனைவரையும் கிளப்பினார். என்ன விசயம் என்று புரியாமல் அனைவரும் ஆச்சரியத்தில் திளைத்தனர்.
"மாப்பிள்ளை படிச்சிருக்கறதால, டவுனில் ஏதாவது வேலை வாங்கித் தந்து தனிக்குடித்தனம் வைக்கலாம்னு வீடு பார்க்கறாரோ" என்று மனதிற்குள் நினைத்தாள் அலமேலு.
ஆனால்...
(சிறகுகள் படபடக்கும்)