கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் உலக அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். அந்த சாதனைகளை யார் முறியடிப்பார் என உலகம் முழுவதும் அவ்வப்போது விவாதங்கள் நடப்பதுண்டு.
இந்திய அணியில் விராட் கோலி சேர்ந்தபின்பு அவர்மீதுதான் அந்த நம்பிக்கை திரும்பியது. அவரும் அதிரடியாக விளையாடி பல சாதனைகளைப் படைத்து வருகிறார். அந்த வகையில், சச்சின் தெண்டுல்கரின் நீண்டகால சாதனையை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார்.
2001-ஆம் ஆண்டு சச்சின் தெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பத்தாயிரம் ரன்களைக் கடந்தார். அது அவரது 259-ஆவது இன்னிங்ஸ் ஆகும். இதுவே, உலகளவில் அதிவேக பத்தாயிரம் ரன்களாக இன்றுவரை நீடித்துவந்தது. ஆனால், வெறும் 205 போட்டிகளிலேயே விராட் கோலி அந்த சாதனையை முறியடித்து, பெருமையை சேர்த்துள்ளார். இந்த சாதனையை இந்திய அளவில் ஐந்தாவது வீரராகவும், உலகளவில் 13ஆவது வீரராகவும் அவர் கடக்கிறார்.
இதற்கிடையே, இன்னொரு சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார். ஒரே ஆண்டில் குறைந்த இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனைதான் அது. 2018ஆம் ஆண்டில் வெறும் 11 போட்டிகளிலேயே விராட் கோலி ஆயிரம் ரன்களைக் கடந்துவிட்டார். இதற்குமுன்னர், 2010ஆம் ஆண்டு 15 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் ஹசீம் அம்லாவும், 2012ஆம் ஆண்டு 15 போட்டிகளில் விராட் கோலியும் ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.