தான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திக்கு ரிஷப் பாண்ட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்ட். இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பாண்ட் 12 போட்டிகளில் 582 ரன்கள் குவித்து, அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதில் ஒரு சதமும், நான்கு அரைசதங்களும் அடக்கம். குறிப்பாக டெல்லி அணிக்காக விளையாடி அதிக ரன்கள் அடித்த கவுதம் கம்பீரின் சாதனையையும் ரிஷப் பாண்ட் முறியடித்துள்ளார். 2008ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் கவுதம் கம்பீர் 534 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மே 8ஆம் தேதி ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் விவரம் வெளியானது. அதில் ரிஷப் பாண்டின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து, ‘ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியில் என் பெயரைத் தேர்வுசெய்யாத தேர்வுக்குழுவின் மீது நான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். என்னுள் இருக்கும் அத்தனை கோபங்களின் வெளிப்பாடுதான் நான் களத்தில் அடிக்கும் சிக்ஸர்கள். அவர்கள் என் விளையாட்டைப் பார்த்தாவது, என்னை அணியில் எடுக்காமல் விட்டதை நினைத்துப் பார்க்கட்டும்’ என ரிஷப் பாண்ட் சொன்னதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவிவருகிறது.
Just to clarify some rumours going around about my statement about not getting selected to play for india I never said anything like that it so just giving out my clarification ?.So please stop spreading rumours and let me concentrate on my cricket ?
— Rishabh Pant (@RishabPant777) May 13, 2018
இதையறிந்த ரிஷப் பாண்ட், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து நான் கூறியதாக ஒரு வதந்தி சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. நான் ஒருபோதும் அப்படி சொன்னதேயில்லை. அதை விளக்கவே இங்கு வந்தேன். எனவே, தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். என் விளையாட்டில் கவனம் செலுத்தவிடுங்கள்’ என விளக்கமளித்துள்ளார்.