டி20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், துபே, பாண்ட்யா, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் அக்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் ரன் குவிக்க முடியாமல் விராட் கோலி தடுமாறி வரும் நிலையில் நேற்றைய போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 46 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக விளையாடி இந்தியாவின் ரன்களை உயர்த்தினர். ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் குவித்தனர்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை சேர்த்தது . 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அக்ஸர் படேல், குல்தீப் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இங்கிலாந்து அணியை 16 ஓவர்கள் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் நாளை (28.06.2024) நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. முன்னதாக 2007 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பை இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தது.
முன்னதாக நேற்று காலையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குத் தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கிர்க்கெட் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.