
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இதில் அந்த பெண்ணின் வாழ்க்கை நலன் கருதி அவரது பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. 21 வயதான இவர்,ஆட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 10ம் தேதி அரக்கோணம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி கலந்து கொண்டார்.
அப்போது எம்.எல்.ஏ. ரவியை நடுரோட்டில் சந்தித்த தேவி.. தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும்.. அதற்கு உரிய நீதி பெற்றுத் தரக் கோரியும் கண்ணீர் மல்க மனு அளித்தார். அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசாயல் என்பவர்.. திமுகவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.
தெய்வசாயலுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில்.. தேவியை காதலிப்பதாக ஏமாற்றிக் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி சோளிங்கர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் வரை சுமூகமாக சென்ற வாழ்க்கையில் திடீரென தனது கோர முகத்தை வெளிக்காட்டிய தெய்வச்சாயல் தேவியை முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவி, இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபோது அவரை தெய்வச்சாயல் தினந்தோறும் தாக்கி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் அவரது தொல்லைகள் அதிகமாகவே, கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி தேவி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.
இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு புகாரளிக்க சென்றபோது, 'இது எங்களுடைய எல்லை இல்லை' என தேவியை திருப்பி அனுப்பிவிட்டனர். அரக்கோணத்தில் இருக்கும் எந்த காவல் நிலையத்திலும் தெய்வசாயலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. கடைசியாக அரக்கோணம் எம்.எல்.ஏ ரவியை சந்தித்து தனக்கு நீதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருவதால் தனக்கு ஆதரவாக இருக்கும்படி எம்.எல்.ஏ. ரவியை வேண்டிக் கொண்டார். இதை தொடர்ந்து தேவிக்கு நீதி கிடைக்கும் வரை ஆதரவாக இருப்பதாக அரக்கோணம் எம்.எல்.ஏ உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கல்லூரி மாணவி அளித்த புகாரின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் தெய்வசாயல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.