Skip to main content

‘எமனுக்கும் எனக்கும் நடக்குற கதை’ - ‘தக் லைஃப்’ கமல்

Published on 17/05/2025 | Edited on 17/05/2025
kamal maniratnam simbu in thug life trailer released

நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி அமைத்துள்ள படம்  ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கடந்த ஆண்டே தொடங்கியிருந்தனர். இப்படத்தில் இருந்து டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி டீசர் ஆகியவை முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பின்பு சமீபத்தில் கமல் எழுத்தில் வெளியான முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ஆம் தேதி நடக்கவுள்ளது. முன்னதாக 16ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில் கமலை உயிர்பிடியில் இருந்து ஒரு சிறுவன்(சிம்பு) காப்பாற்றுகிறார். உயிரை காப்பாற்றியதால் அச்சிறுவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கமல், பின்பு ஒரு உயர்ந்த இடத்துக்கு வந்த பின்பும் தனக்கு அப்புறம் சிம்பு தான் எல்லாமே என அந்த உயர்ந்த பொறுப்பை கொடுக்க முடிவெடுக்கிறார். இது பலருக்கு பிடிக்காமல் போக மோதல் போக்கு ஆரம்பிக்கிறது. இந்த மோதலில் வென்றது யார் என்பதை ஆக்‌ஷன் அதிகம் கலந்து படத்தில் சொல்லியிருப்பது போல் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. மேலும் ட்ரைலரின் இறுதியில் கமலுக்கும் சிம்புவுக்குமே ஒரு கட்டத்தில் மோதல் போக்கு நீடிப்பதாக காட்டப்படுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் இடம்பெறுகிறது. அப்போது கமல், சிம்புவை பார்த்து, ‘எமனுக்கும் எனக்கும் நடக்குற கதை’ என சொல்கிறார். இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்