
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் கிராம ஊராட்சியில் சொற்ப மதிப்பூதியத்தில் தூய்மை காவலராக பணியாற்றி வருபவர் முத்துக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியின் மகள் ரேஷ்மா புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுதியிருந்தார். நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் மாணவி ரேஷ்மா 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்றும், தமிழ் பாடத்தில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தும், தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தும் சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி ரேஷ்மாவை பள்ளி நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் பாராட்டிச் சிறப்புச் செய்தனர். எளிய பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தூய்மை காவலரின் மகள் மாணவி ரேஷ்மா கல்வியில் சாதனை படைத்திருப்பதை அறிந்து பல்வேறு தரப்பினர் வரவேற்று நேரிலும் தொலைப்பேசி வாயிலாகவும் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாணவியர் ரேஷ்மா நம்மிடம் கூறுகையில், ஆசிரியர்களின் அன்பான அரவணைப்பு மற்றும் புரியும் படியான வழிகாட்டுதலும், பெற்றோர்களின் உதவியுடனும் படித்ததால் தான் 498 மதிப்பெண்கள் பெற முடிந்தது. எனது அம்மா முத்துலட்சுமி நர்சிங் படிக்க வேண்டும் என விரும்பி இருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. என் அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் நர்சிங் படிப்பையும் தாண்டி ஒரு நல்ல மருத்துவராகி, எதிர்காலத்தில் ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு சேவையாற்றும் விதத்தில் எனது உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் கனவாக உள்ளது” என்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 89 அரசு பள்ளிகள் உட்பட 308 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 459 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 20 ஆயிரத்து 764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.76 சதவீத தேர்ச்சியாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.37 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டம், மாநில அளவில் தேர்ச்சி சதவீத பட்டியலில் 9வது இடத்தில் இருந்து தற்போது 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி