
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யசெந்தில்குமார் தலைமை தாங்கினார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன்(வி.சி.க), விருத்தாச்சலம் தொகுதி ராதாகிருஷ்ணன்(காங்கிரஸ்), மாநகராட்சி மேயர் சுந்தரி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து பேசினர்.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 31-ஆம் தேதி மதச்சார்பின்மை காப்போம், மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி அறிவித்துள்ளோம். அதனைத் தவிர்க்க முடியாத காரணத்தால் ஜூன் 14 ஆம் தேதிக்கு திட்டமிட்டுள்ளோம். வக்பு வாரிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான பாஜக அரசு தாக்குதலை தடுக்க வேண்டும், ஜனநாயக சக்திகள் ஓரணியில் அணி திரள வேண்டும் என மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியாக நடைபெறும். இதில் அனைவரும் நீலச்சட்டை அணிந்து நீல சட்டை பேரணியாக ஒருங்கிணைக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் மதச்சார்பற்ற அரசை நிறுவுவதற்குத் தான் அரசமைப்பு சட்டத்தை வகுத்து வைத்தார். அதனை பாஜக சங் பரிவாரங்கள் பல முனைகளிலிருந்து தாக்குதலை ஏற்படுத்துகிறது.
கடலூர் அருகே குடிகாடு அருகே சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் சேகரிக்க வைத்து வைக்கப்பட்ட சாயக்கழிவுகள் தொட்டி வெடித்து 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன் அவரும் நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளதால் காற்று, குடிநீர் மாசடைந்து பல்வேறு நோய்கள் வருவதாக கூறுகிறார்கள். எனவே அப்பகுதியில் இருந்து சாய ஆலையை அமைக்கக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திமுகவை எதிர்க்கும் அணி இன்னும் உருவாகவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ளோம், அதில் தொடர்வோம்” என்று கூறினார்.