Skip to main content

ஐ.பி.எல். மூலம் மீண்டும் வருவேன் – சின்ன தல ரெய்னா

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

இவர் இல்லாமல் ஐ.பி.எல். தொடர் பற்றிய விவாதங்கள் இருக்காது. ஐ.பி.எல். போட்டி எங்கு நடந்தாலும் இவரின் ஆட்டம் எப்போதும் தனி ஸ்பெஷல். எதிர் அணியிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு நல்ல மனிதாபிமான கிரிக்கெட்டர். ஐ.பி.எல். தொடரின் மிஸ்டர் .ஐ.பி.எல். என்று புகழப்படுபவர் சுரேஷ் ரெய்னா. ஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்த ரெய்னா, இன்று இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். வரும் ஐ.பி.எல்.  தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பெற முடியும் என்று நம்புகிறார் சின்ன தல ரெய்னா.
 

raina

 

ஒருநாள் போட்டிகளில் 2015-ஆம் ஆண்டில் 20 போட்டிகளில் ஆடியிருந்த ரெய்னா 2016 மற்றும் 2017-களில் ஒரு போட்டியில்கூட அணியில் இடம்பெறவில்லை. 2018-ல் 3 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய ரெய்னா ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

 
டி20 போட்டிகளை பொறுத்தவரை 2016-ல் 16 போட்டிகள், 2017-ல் 3 போட்டிகள், 2018-ல் 13 போட்டிகள் என தொடர்ந்து அணியில் இருந்து வந்தார் ரெய்னா. 2018-ல் தென் ஆப்ரிக்கா தொடர், நிதாஸ் ட்ராபி, அயர்லாந்து தொடர், இங்கிலாந்து தொடர் ஆகிய தொடர்களில் ஆடியுள்ளார் ரெய்னா. 2018-ல் ஸ்ட்ரைக் ரேட் 144, பேட்டிங் சராசரி 27 என ஓரளவு சிறப்பாக இருந்தாலும் இன்று அணியில் இடமில்லை. சமீபத்தில் அவருக்கு இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பில் நன்றாக விளையாடியுள்ளார். உலகக்கோப்பை நடைபெறும் இங்கிலாந்தில் 7 மாதங்களுக்கு முன்பு இந்திய அணிக்காக விளையாடிய ரெய்னா தற்போது உலகக்கோப்பை தொடரில்  இந்திய அணியில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.    
 

 

raina

 

“கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக விளையாடிய போதிலும் அணியில் இடம் பெறாமல்போனது வருத்தமளிக்கிறது. இது யாருடைய தவறுமில்லை. நான் கடினமாக உழைப்பேன், தொடர்ந்து ஃபார்மில் இருக்க முயற்சி செய்வேன்” என்று ரெய்னா கூறியுள்ளார்.  
 

ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவ்வப்போது சிறப்பாக விளையாடி வந்தாலும் தொடர்ந்து ஃபார்ம் இல்லாமல் இருந்து வருகிறார். கார்த்திக், ராயுடு, கேதர் ஜாதவ், பண்ட் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு தற்போது மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வருகின்றனர். நல்ல அனுபவம், பார்ட் டைம் பவுலர், மாஸ் பீல்டர் என இந்திய அணிக்கு தேவையான பல தகுதிகளை ரெய்னா பெற்றிருந்தாலும் அணியில் இடம்பிடிக்க முடியமால் உள்ளார்.
 

தோனி தலைமையில் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய தொடர்களில் வென்றபோது இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு ரெய்னா இந்திய அணியில் நிரந்தரமாக விளையாட முடியவில்லை. 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கில் ரெய்னா சிறப்பாக விளையாடிவந்தார். ஐ.பி.எல்.-லில் அனைத்து தொடர்களிலும் சென்னை அணிக்கு சிறந்த வீரராக வலம் வந்தவர் ரெய்னா. 
 

உலகக்கோப்பை தொடர் குறித்து ரெய்னா பேசும்போது இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் தோனி இறங்கலாம் என்று கூறினார். தோனி சிறந்த பினிஷராகவும், சூழ்நிலைக்கு ஏற்றார்போல ஆடும் திறமையும் கொண்டுள்ளதால் நான்காவது இடத்திற்கு தோனி மிகவும் பொருத்தமானவர் என்று ரெய்னா கூறினார். 
 

raina

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையும், சின்ன தலயுமான ரெய்னா சென்னை அணிக்கு பேட்டிங், பீல்டிங், பவுலிங் என ஆல்-ரவுண்டராக கலக்கி வருகிறார். உலகின் சிறந்த ஜாம்பவான் ஃபீல்டரான ஜாண்டி ரோட்ஸ் 2000-ஆம் நுற்றாண்டின் சிறந்த பீல்டராக 5 பேரை கூறிருந்தார். அதில் ரெய்னாவை  முக்கிய வீரராக கூறினார். வரும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்துவருகிறார் ரெய்னா.

 

 

 

Next Story

நீ கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன்; பதிலடி தந்த சி.எஸ்.கே!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
csk vs srh csk beats sun risers hyderabad

ஐபிஎல்2024 இன் 46ஆவது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு பவர் பிளேயிலேயே முதல் விக்கெட் விழுந்தது. ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் களமிறங்கினார். கடந்த ஆட்டத்தைப் போலவே பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியும் காட்டிய ருதுராஜ் அரைசதம் கடந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சிக்சர்களின் நாயகன் சிவம் துபே வழக்கம் போல அதிரடியாக சிக்சர்களை பறக்க விட ஆரம்பித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் பந்துவீச்சில் புவனேஷ்வர், நடராஜன், உனாத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

கடந்த சில ஆட்டங்களாக 200 ரன்கள் எளிதில் எடுக்கப்படுவதும், சன் ரைசர்ஸ் அணி இருக்கும் ஃபார்மிற்கு இந்த ஸ்கோர் போதுமா ரன ரசிகர்கள் நினைத்தாலும், கடந்த ஆட்டத்தில் 206 ரன்களை சன் ரைசர்ஸ் எடுக்க முடியாமல் பெங்களூரு அணியிடம் தோற்றதாலும், சொந்த மைதானம் என்ற நம்பிக்கையிலும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் தன்னம்பிக்கையுடன் களமிறங்கினார். அந்த நம்பிக்கையை சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் வீணாக்கவில்லை.

சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 32, கிளாசென் 20, சமத் 19 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

குறிப்பாக கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஷர்துல், தேஷ்பாண்டே, முஸ்டபிசுர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். மிகவும் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே 27 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளும், பதிரனா, முஸ்டபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, ஷர்துல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 98 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்த ருதுராஜ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.