18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது.
கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.
அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.
பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.