Skip to main content

நூறாவது போட்டியில் நூறு.. மாறாத பிங்க் ஜெர்சி மாயம்.. அசத்தலான ஒருநாள் போட்டி!

Published on 11/02/2018 | Edited on 11/02/2018
South Africa

 

தென் ஆப்பிரிக்காவுடனான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஒருவேளை அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால், தொடரைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால், அப்படியொரு வாய்ப்பை இந்தியாவிற்கு கிடைக்காமல் தடுக்கிறது தென் ஆப்பிரிக்க அணி. 

 

காயம் காரணமாக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஓய்வுபெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ், நான்காவது போட்டியில் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்பட்டது. அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணியின் சீருடையில் இருந்த மாற்றமும் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியது. 2011ஆம் ஆண்டிலிருந்து மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் ஜெர்சியில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணி ஒருமுறை கூட தோற்றதில்லை என்பது வரலாறு. 

 

இந்திய அணியைப் பொறுத்தவரை தொடர்ந்து அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் ரோஹித் தவிர்த்து, மற்ற அனைவரின் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. மீசை நாயகன் சிகர் தவானுக்கு அது நூறாவது ஒருநாள் போட்டி என்பது கூடுதல் சிறப்பு. சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல் காம்போவும் முந்தைய போட்டிகளில் அதிக நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. இதுவரை ஒருமுறை கூட தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றிடாத இந்திய அணி, இந்தப் போட்டியில் வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

 

இந்நிலையில், ஜோனஸ்பெர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 5 ரன்களில் ரோஹித் சர்மா பெவிலியன் திரும்ப, தவான் - கோலி இணை 158 ரன்களை சேர்த்தது. நூறாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சிகர் தவான் படைத்தார். அதன்பின் வந்தவர்களில் தோனி தவிர மற்ற யாரும் பெரிதாக தென் ஆப்பிரிக்க வீரர்களை சோதிக்கவில்லை. இந்திய அணியின் பேட்டிங் இரண்டு முறை தடைப்பட்டதும் ஆட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது.

 

290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடியது. இந்திய அணியிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுழல் மாயம், நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எடுபடவில்லை. சகால் வீசிய பந்தில் இரண்டு முறை மில்லர் பெவிலியன் திரும்புவதில் இருந்து தப்பினார். அதில் ஒரு நோபாலும் அடக்கம். அதீத பதட்டமும் இந்திய அணியிடம் தொற்றிக் கொண்டதாகவே தெரிந்தது. அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணியின் கீப்பர் ஹெய்ன்ரிச் க்ளாசன் அபாரமாக ஆடி ரன்குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தப்பட்டதால் 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தால் என இலக்கு மாற்றப்பட, 25.3 ஓவர்களில் வெற்றி இலக்கைக் கடந்த தென் ஆப்பிரிக்க அணி, பிங்க் ஜெர்சி மாயத்தையும் தக்கவைத்துக் கொண்டது.

 

இதற்கு முன் 2011ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க மண்ணில் தோனி தலைமையிலான இந்திய அணி ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்கியது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றாலும், அந்தத் தொடரை 2 - 3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அந்த நிலை இந்தத் தொடரில் நடந்துவிடக்கூடாது என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.