பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பணம் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி உள்ளார்கள். இதைத் தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.